மண் புழுக்கள் என்ன செய்யும்? (மெய்யன் நடராஜ்)

திருடன் வீட்டில் நின்று
என்னைப் பார்த்துக்
குரைக்கிறது
களவுபோன என் நாய்.

எனது நியாயம்
தண்டிக்கப் படுகின்றது
எதிரி நீட்டிய லஞ்சத்தில்.

எங்களுக்குத் தெரியாமல்
வெளிநாடுகளில்
விலையாகிப் போனதாய்
புள்ளி விபரம் சொல்லுது
வரவு செலவு கணக்கு,

நாங்கள் விதைத்த நெல்
அறுவடையாகிறது
அடுத்தவன் நிலத்தில்.

நாங்கள் கொடுத்த வாக்கு
கட்சி விட்டு கட்சி தாவி
பணம் சம்பாதிக்கிறது
அரசியல் சாசனத்தில்

எங்கள் வார்த்தைகள் மட்டும்
ஊமையாய் கிடக்கிறது
எங்களுக்குள் இன்னும் .

எங்கள் சண்டைகளில்
நீதி யார் பக்கம் இருந்தாலும்
பரவாய் இல்லை
நிதி யார் பக்கம் என்று
பார்க்கும் உள்ளங்கைகளுக்கு
என்றும் அடைமழை

நாங்கள்தான்
இன்னும் ஒட்டுப்போட்ட
குடையோடு புயல் காற்றில்
போராடுகிறோம்.

இது கண்ணீர் தேசம்
எங்கள் விழிக் குளங்கள்
வற்றி நாங்கள்
கருவாடாய் போனபின்னும்
எம்மை விற்பனை செய்ய
கற்பனை செய்யும் முதலைகள்
வாழும் அபாய கிடங்கு
இங்கே திமிங்கிலங்களே
திருடுப் போகுபோது
மண் புழுக்களால்
என்ன செய்ய முடியும்?

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (13-Oct-13, 2:36 am)
பார்வை : 131

மேலே