காதல் கீதம் - 2

“என்ன அடைக்கப்பா, இப்பத்தான் வரியா? என்ன இவ்வளவு லேட்டா வர” என்று அவனுடைய சித்தி கேட்டாள்.

சட்டென்று சுதாரித்து கொண்டு திரும்பிய அடைக்கப்பன், “ஆ, ஆமாம் சித்தி, நேரா மெட்ராஸ்லேருந்து இப்பத்தான் வரேன். விழுப்புரம் கிட்ட பயங்கர ட்ராஃபிக், அதனால தான் லேட்டு. ஆமா, அம்மா எங்க சித்தி? நான் குளிக்கணும். இங்க எங்க குளிக்கலாம்?” என்று கேட்டான்.

“அம்மா அங்க மாப்பிள்ளை அழைப்புக்காக, கோயில்ல இருக்காங்க.இரு, நான் இங்க பொண்ணு வீட்டில சொல்லி ஏற்பாடு பண்றேன். நீ சீக்கிரம் குளிச்சிட்டு வந்துடு. கால் மணி நேரத்துல மாப்பிள்ளை அழைக்க நாங்க எல்லாம் கோவிலுக்கு போயிடுவோம். அதுக்குள்ள சீக்கிரம் வந்துடு” என்றாள் சித்தி.

கொஞ்ச நேரத்தில், அவன் மணப்பெண்ணின் சொந்தக்காரர் வீட்டில் போயி குளித்துவிட்டு, கல்யாண வீட்டுக்கு வந்தான்.

என்னது, நம்முடைய சொந்தக்காரங்க யாரையும் காணோமே! இப்ப என்ன பண்றது என்று குழம்பினான் அடைக்கப்பன்.

தன்னை குளிக்க கூட்டிக்கிட்டு சென்றவரிடம்,
“ஏங்க, மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க யாரையுமே காணோமே?” என்று கேட்டான் அடைக்கப்பன்.

“அவுங்க எல்லாம் மாப்பிள்ளை அழைப்புக்கு
போயிருக்காங்க.நீங்க வந்து டிபன் சாப்பிடுங்க, அவுங்க எல்லாம் இப்ப வந்துடுவாங்க” என்று பதில் சொன்னார் அவர்.

“ஆமா, நீங்க கல்யாணப் பெண்ணுக்கு என்ன வேணும்?” என்று கேட்டான் அடைக்கப்பன்.

“நான், அவுங்க மாமா பையன். என் பேரு சிதம்பரம். நீங்க மாப்பிள்ளைக்கு என்ன வேணும்?” என்று கேட்டார் அவர்

“நான், மாப்பிள்ளையோட அத்தை பையன். என் பேரு அடைக்கப்பன். நான் மெட்ராஸ்ல future softwaresல வேலை பார்க்கிறேன்” என்றான்.

“அட, future softwaresல தான் வேலை பார்க்கிறீங்களா!! உங்களோட சாஃப்ட்வேர தான் நாங்க யூஸ் பண்றோம். நான் சக்தி சுகர்ஸ்ல plant engineerரா வேலை பார்க்கிறேன்” என்றான் சிதம்பரம்.

அடைக்கப்பன்,“அப்படியா!! உங்க சிஸ்டம் enhancementக்காக எங்க ஆபிஸ்லேருந்து, ரெண்டு,முணு பேரு உங்க ஃபேக்டரிக்கு ஒரு வருஷத்துக்கு வருவாங்கன்னு நினைக்கிறேன்” என்றான்.

“நீங்க வருவீங்களா?” என்று கேட்டான் சிதம்பரம்.

“தெரியல சிதம்பரம். அடுத்த மாசம் தான் தெரியும்” என்றான் அடைக்கப்பன்.

“நீங்க கண்டிப்பா வர பாருங்க. சரி. நானும் இன்னும் சாப்பிடலை, வாங்க ரெண்டு பேருமா போய் சாப்பிடலாம்” என்று சாப்பிடும் இடத்துக்கு அடைக்கப்பனை கூட்டிக்கொண்டு போனான் சிதம்பரம்.

இலைக்கு முன்னாடி உட்கார்ந்து, தலையை நிமிர்த்திய அடைக்கப்பனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. எதிரில் அவன் மனதை கொள்ளை கொண்ட பெண் உட்கார்ந்து
சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அடைக்கப்பன் தன் மனதுக்குள், ஆ! என்னது இது, நம்ம தேவதை எதிர்ல உட்கார்ந்து சாப்பிடுறா!!! ஐயோ,இப்படி எதிர்ல உட்கார்ந்து நம்மளை கொல்லுறாளே!! சே, இவன் வேற நம்ம பக்கத்துல உட்கார்ந்து இருக்கான். சரி, இவனுக்கு தெரியாம அவளை பார்க்க வேண்டியது தான் என்று எண்ணிக்கொண்டு, திருட்டுத்தனமாக அப்ப அப்ப எதிரேயும் பார்த்துக் கொண்டிருந்தான். ஆஹா, இவ சாப்பிடுறதே ஒரு தனி அழகு தான். சாப்பாட்டுக்கும் வலிக்காம, கைக்கும் வலிக்காம என்ன அழகா இலையிலிருந்து எடுத்து சாப்பிடுறா. நாமளும் இந்த மாதிரி சாப்பிட்டு பார்ப்போம் என்று அவளை மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சாப்பிட்டான்.

இவன் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சாப்பிடுவதை பார்த்த சிதம்பரம், “நல்லா சாப்பிடுங்க அடைக்கப்பன். இப்படி சாப்பிட்டா, எப்ப சாப்பிட்டு முடிக்கிறது. நல்லா எடுத்து சாப்பிடுங்க” என்று சொன்னான்.

அடைக்கப்பன் தன் மனதுக்குள், அங்க எதிர்ல ஒருத்தி அப்படிதான் சாப்பிடுறா, முதல்ல அவக்கிட்ட சொல்லு என்று சொல்லிக்கொண்டான்.

“இன்னொரு பணியாரம் வச்சுக்குங்க அடைக்கப்பன். இந்தாப்பா, இவருக்கு இன்னொரு பணியாரம் வை” என்று பரிமாறுபவரிடம் சொன்னான் சிதம்பரம்.

அப்போது, அடைக்கப்பன் எதிரில் பார்த்தான். அந்த பெண்ணும் அடைக்கப்பனை பார்த்து, உடனே தலையை குனிந்துக் கொண்டாள்.

அட! இவளும் நம்மளை பார்க்கிறாளே. இவ யாரு, பேரு என்ன, எல்லாம் எப்படி தெரிஞ்சுக்கலாம். எப்படியாவது இன்னைக்கு ராத்திரிக்குள்ள, இவளைப் பத்தி தெரிஞ்சுக்கணும் என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டான் அடைக்கப்பன்.

அடைக்கப்பனும், சிதம்பரமும் சாப்பிட்டு முடிக்கவும், அங்கே மாப்பிள்ளையை அழைத்துக் கொண்டு உள்ளே வருவதும் சரியாக இருந்தது.

“ரொம்ப தாங்க்ஸ் சிதம்பரம், நீங்க எனக்கு கம்பெனி கொடுத்ததுக்கு.இல்லன்னா, யாரையும் தெரியாம, நான் மட்டும் தனியா இவ்வளவு நேரம் இங்க இருந்திருக்கனும் என்று சொன்னான் அடைக்கப்பன்.

“அட, இதுக்கு போயி என்னத்துக்கு தாங்க்ஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு. சரி நாம அப்புறம் பார்ப்போம்” என்று . சிதம்பரமும் அடைக்கப்பனை விட்டு விலகிச் சென்றான்.

அப்போது அவனை பார்த்த அவன் அம்மா , “அடைக்கப்பா, எப்ப வந்த? ஆமா இங்கேயே இருந்திட்டியா? சரி சாப்பிட்டியா?” என்று கேள்விகளை அடுக்கினாள்.

“ஆமாம் அம்மா, குளிச்சிட்டு வந்து பார்த்தா எல்லாரும் போயிட்டாங்க, அதனால இங்கயே இருந்திட்டேன். டிபன் எல்லாம் ஆச்சு” என்று பதில் சொன்னான் அடைக்கப்பன்.

“மதராஸ்ல,ஒழுங்கா வீட்டையெல்லாம் பூட்டிட்டு தானே வந்தே?” என்று கேள்வி எழுப்பினாள் அவன் அம்மா.

அடைக்கப்பன், “தன்னை சுற்றி ஒரு முறை பார்த்துவிட்டு, ஏம்மா, எல்லோர் முன்னாடியும் மானத்தை வாங்குற? அது எல்லாம் நல்லா பூட்டிட்டு தான் வந்தேன். சரி நான் போயி மாப்பிள்ளையை பார்க்கிறேன்” என்று கூறிக் கொண்டு .மாப்பிளையின் பக்கத்தில் போயி உட்கார்ந்தான்.

“மாப்பிள்ளை, வாழ்த்துக்கள்!. கொஞ்சம் சிரிடா. டென்சனா இல்லாம,ரிலாக்ஸா இரு. வேற யாரும் பொண்ணு கழுத்துல போயி தாலி கட்டிர மாட்டாங்க” என்று மாப்பிள்ளையை ஓட்ட ஆரம்பித்தான்.

“நீ கொஞ்சம் நேரம் பேசாம இருக்கியா அடைக்கப்பா. நானே கை எல்லாம் நடுங்காம எப்படி தாலி கட்டுறதுன்னு பயந்துகிட்டு இருக்கேன்” என்றான் மாப்பிள்ளை மணி.

“ஃபூ, இதுக்கு தான் டென்சனா, நீ முன்னாடியே, தனியா கண்ணாடி முன்னாடி நின்னு தாலி கட்டுற மாதிரி பிராக்டிஸ் செஞ்சிருக்கணும். சரி, சரி, பொண்ணு வீட்டில, உனக்கு எல்லாரையும் தெரியுமா?” என்று கேட்டான் அடைக்கப்பன்.

உடனே கல்யாண மாப்பிள்ளை,“ஏன் அதுக்குள்ள யாருக்காவது ரூட் போட்டுட்டியா” என்று கேட்டான்

“ஐயையோ, அது எல்லாம் ஒன்னுமில்லை. கல்யாணப் பெண்ணோட மாமா பையன் பழக்கமானாரா, அதான் கேட்டேன்” என்று சமாளித்தான் அடைக்கப்பன்.

மாப்பிள்ளையை மணவறைக்கு கூப்பிடுங்கப்பா! என்று குரல் வர, மாப்பிள்ளை எந்திரிச்சு மணவறைக்கு போனான்.

அடைக்கப்பனிடமிருந்து ஒரு நிம்மதி பெருமூச்சு வந்தது. அப்பாடா, தப்பிச்சோம். இவன் கிட்ட போயி கேட்டோம் பாரு, இவன் ஊரு முழுக்க பரப்பிடுவானே, நல்ல காலம் மழுப்பிட்டோம். முதல்ல அவ யாருன்னு தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி, அவ என்ன கோயில்லுன்னு தெரிஞ்சுக்கணும். ஒரே கோயிலா இருந்தா அவளை இங்கேயே மறந்துடவேண்டியது தான் என்று எண்ணிக் கொண்டான்.

(அவர்கள் இனம், 9 கோவில்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த இனத்தில் ஒவ்வொருவரும் 9கோவில்களில், ஏதாவது ஓர் கோவிலை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஒரே கோவிலை சேர்ந்தவர்கள், திருமண பந்தம் செய்ய மாட்டார்கள். அதனால் தான் நம் நாயகனுக்கு அந்த பயம் ஏற்பட்டது).

இதற்குள், அங்கு மணவறையில் திருப்பூட்டும் நிகழ்ச்சி முடிந்து விட்டது. மாப்பிள்ளை கை,கால் எல்லாம் நடுங்கி, எப்படியோ பொண்ணுக்கு ஒரு வழியா தாலி கட்டி விட்டான். பிறகு மாப்பிள்ளையும், பொண்ணையும் வைத்து நிறைய சடங்குகள் செய்ய ஆரம்பித்தார்கள். ஏற்கனவே மாப்பிள்ளைக்கு கல்யாண டென்ஷன்,அதுக்கும் மேல யாகத்தீக்கு எதிரில் உட்கார்ந்திருப்பதால் வேர்வை ஆறாக அவன் முகத்திலிருந்து ஓடியது. இதை கவனித்த அடைக்கப்பனின் அப்பா,

அடைக்கப்பா, மாப்பிள்ளைக்கு தோழனா அவன் பக்கத்துல போயி நில்லுன்னு சொல்ல,
அடைக்கப்பனும் மாப்பிள்ளை பக்கத்துல போய் நின்று கொண்டு, அடிக்கடி, மாப்பிள்ளையின் நெற்றி வியர்வையை துடைத்துக் கொண்டிருந்தான். அங்கே இவன் செய்கையை பெண்கள் உட்கார்ந்து இருந்த இடத்திலிருந்து அந்த பெண் பார்த்துக் கொண்டிருந்தாள். தற்செயலாக இவன் நிமிர்ந்த போது, இருவருடைய விழிகளும் ஒன்றோடொன்று கலந்தன. அவள் உடனே குனிந்து கொண்டாள். இவன் பார்ப்பதும், அவள் பார்ப்பதும், அவள் பார்க்கையில், இவன் பார்த்தால், அவள் கீழே பார்ப்பதுமாக, இந்த நாடகம் அங்கே யாரும் பார்க்காமல் அழகாக அரங்கேறிக்கொண்டிருந்தது.

எதுக்கெடுத்தாலும் இறைவனை வேண்டிக் கொள்ளும் அடைக்கப்பன், இப்போது அந்த பெண்ணுக்காக வேண்டிக் கொண்டான். பிள்ளையாரப்பா, உனக்கு மதராஸ் வந்து ஒரு தேங்காயை உடைக்கிறேன், இவள் என் கோவிலாக இருக்கக்கூடாது. சீ, நாம ஏன் இப்படி எல்லாம் வேண்டிக்கிறோம். இல்லை, இது சுரேஷ் சொன்ன மாதிரி கண்டவுடன் காதல் தான். ஒரு நிமிஷம் கூட அவளை பார்க்காம இருக்க முடியலையே. இதை இப்படியே விடக் கூடாது. முதல்ல அவளைப் பத்தி தெரிஞ்சுக்கனும் என்று மனதுக்குள் பேசிக்கொண்டான். .

அங்கே சற்று தள்ளி இருந்த தன் சித்தி மகன் ரமேஷைக் கூப்பிட்டு, கொஞ்சம் மாப்பிள்ளை பக்கத்துல வந்து நில்லு,நான் இப்ப வந்துடுறேன் என்று சொல்லி . தன் அம்மா உட்கார்ந்து இருக்குமிடம் செல்கிறான்.

அடைக்கப்பன் தன் அம்மாவின் அருகில் வந்து நின்னதை பார்த்ததும்,அங்கு இருந்த ஒரு ஆச்சி, இவன் அம்மாவிடம், “இவன் தான் உன் மகனாத்தா” என்று கேட்டார்.

“ஆமா ஆச்சி. டேய் இவுங்க நம்ம ஆயா வீட்டுக்கு பங்காளி வீட்டு ஆச்சி” என்றாள் அடைக்கப்பனின் அம்மா.

“ஆச்சி, நல்லா இருக்கீங்களா? நான் தான் அடைக்கப்பன்” என்றான்.

“நான் நல்லா குத்துக்கல்லாட்டம் இருக்கேன். ஆமா, நீ எங்க வேலை பாக்குற?” என்று கேட்டார்

“நான் மதராஸ்ல ஒரு சாஃப்ட்வேர் கம்பெனில வேலை பார்க்கிறேன் ஆச்சி”என்றான் .

அந்த ஆச்சியோ, “ஏண்டி இவனுக்கு எப்ப கலியாணம் பேச போற?” என்று இவன் அம்மாவிடம் கேட்டார்.

“அடுத்த வருஷம் பேச ஆரம்பிச்சுட வேண்டியதுதான். நல்ல பொண்ணு இருந்தா சொல்லுங்க ஆச்சி” என்றாள் அடைக்கப்பனின் அம்மா.

“அதுக்கென்ன, நல்லா இடமா வந்தா சொல்றேன். நீயும் பாக்குறவங்ககிட்ட எல்லாம் சொல்லி வை.அப்பதான் நல்ல இடமா அமையும்” என்று அவளிடம்கூறினார்.

“சரி ஆச்சி” என்றுகூறிய அடைக்கப்ப்னின் அம்மா, அடைக்கப்பனிடம் திரும்பி, “ஏண்டா நான் எவ்வளவு தூரம் சொன்னேன் முத நாளே வந்துடுன்னு. இப்ப பாரு, பொண்ணு வீட்டுக்காரங்க கிட்ட போய் நீ குளிக்கிறதுக்காக சித்தி கேட்டிருக்கா. அப்புறம் நீயும் நாங்க வர வரைக்கும் தனியா இருந்திருக்க வேணாம் பாரு என்று அடைக்கப்பனிடம் கோபித்துக் கொண்டாள்.

“நான் தனியா இல்லம்மா, பொண்ணோட மாமா பையன் எனக்கு கம்பெனி கொடுத்தாரு” என்று அடைக்கப்பன் பதில் சொன்னான்.

உடனே பக்கத்தில் இருந்த அவ னோட சித்தி, “யாருடா சக்தி சுகர்ஸ்ல வேலை பார்க்கிற அந்த பையனா?” என்று கேட்டாள்.

“ஆமா சித்தி, அவர் ரொம்ப நல்ல டைப். நாங்க தான் அவுங்க கம்பெனிக்கு சாஃப்ட்வேர் பண்றோம்” என்றான் அடைக்கப்பன்.

“உனக்கு தெரியுமா ஆச்சி, அந்த குடும்பமே ஒரு இன்ஜினியர் குடும்பம். பையன், முத பொண்ணு இரண்டு பேரும் இன்ஜினியர். இன்னொரு பொண்ணும் இன்ஜினியருக்கு படிக்குதாம். முத பொண்ணு வெளி நாட்டில இருக்கு. ரெண்டாவது பொண்ணு தான் வந்திருக்கு. அதோ அந்த ஊதா கலர்ல, தாவணி போட்டிருக்குப் பாரு, அது தான்” என்று அடைக்கப்பனின் தாயாரிடம் கூறினாள்.

“ஓ! அந்த பொண்ணா, பார்க்கிறதுக்கு நல்லா லட்சணமாத்தான் இருக்கா. அவ பேரு ஜானகி போல, அப்பப்ப ஜானகி, ஜானகின்னு அந்த பொண்ணை கூப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. ஆமா , அவுங்க என்ன கோவிலாம்” என்று கேட்டாள் அடைக்கப்பனின் அம்மா.

அதற்கு அவனின் சித்தி, “சூரக்குடின்னு நினைக்கிறேன்” என்றாள்.

“சரிம்மா, நான் அங்க போய் வேற ஏதாவது வேலை இருக்கான்னு பார்க்குறேன்” என்று கூறி அடைகாப்பான் அங்கிருந்து நகர்ந்தான்.

அடைக்கப்பன் மனசுக்குள்,ஆஹா இத தான் பழம் நழுவி பால்ல விழுறதுன்னு சொல்லுவாங்களோ!. நாம கேக்காம, நமக்கு தெரிய வேண்டிய நியூஸ் எல்லாம் தெரிஞ்சிடுச்சு. அப்பாடா, அவ நம்ம கோவில் இல்லை. கடைசில அந்த சிதம்பரத்தோட தங்கச்சி தானா அவ. நல்ல காலம். சாப்பிடும்போது நாம அவளை பார்த்ததை அவன் பாக்கலை என்று சொல்லிக்கொண்டான்.

மதிய உணவு முடித்து, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எல்லோரும் அவுங்க ஊருக்கு திரும்பி போனார்கள். மாப்பிளையும், பொண்ணு ம், அடைக்கப்பனோட சித்தியும், பொண்ணோட பெரியம்மா பேத்தியும் தனியாக காரில் மாப்பிள்ளையின் ஊருக்கு வந்தார்கள்.

அவர்களுடைய வழக்கப்படி, மாலையில் மாப்பிளையின் வீட்டில் பெண் அழைப்பு நடைபெறும். இங்கு மாப்பிள்ளையின் வீடு, அடைக்கப்பனுடைய ஆயாவின் வீடு (அம்மாவின் அம்மா வீடு) தான்.

நம் கதையின் நாயகன், தன் ஆயாவின் வீட்டில் இங்குமங்குமாக வேலை பார்த்துக்கொண்டிருந்தான்.உடம்பு தான் வேலை பார்த்துக் கொண்டிருந்ததே தவிர, மனசு முழுக்க ஜானகி நிரம்பி இருந்தாள்.

அடிக்கடி நேரத்தை பார்த்த அடைக்கப்பன், சே, இன்னமுமா பொண்ணு வீடு வரமா இருக்காங்க? சீக்கிரம் வந்த தானே நாம, நம்ம தேவதையை பார்க்கலாம் என்று மனதுக்குள் ஒரு போராட்டத்தையே நடத்திக்கொண்டிருந்தான்.

அப்போது பெண் வீட்டுக்காரர்கள் வர ஆரம்பித்தார்கள். உடனே மாபிள்ளை வீட்டு ஆட்கள் எல்லோரும் போய் வாசலில் நின்று அவர்களை வரவேற்றார்கள்.அடைக்கப்பனும் தன் பங்குக்கு எல்லோரையும் வரவேற்றான். ஆனால் கண்கள் மட்டும் ஜானகியை தேடிக் கொண்டிருந்தது.

அவள் வருவதைப் பார்த்தவுடன், முகமெல்லாம் புன்னகையுடன், “வாங்க! வாங்க!” என்றான் அடைக்கப்பன். அவள் அவனைப் பார்த்து விட்டு தலையை குனிந்து கொண்டு சென்றாள்.

பிறகு பெண் வீட்டுக்காரர்கள் எல்லோரும் சாப்பிட போனார்கள்.அடைக்கப்பனும் பந்தி விசாரிப்பதற்கு சென்றான்.

ஆண்கள் சாப்பிட்டு முடித்து, பெண்கள் சாப்பிட போனபோது, ஜானகியும், அவளின் இன்னொரு அத்தை பெண்ணும் பக்கத்து பக்கத்து இலையில் அமர்ந்து சாப்பிட்டார்கள்.

அடைக்கப்பனும், எல்லாரிடமும் சென்று, ஆச்சி,உங்களுக்கு என்ன வேணும் என்று கேட்டு கேட்டு பரிமாறிக் கொண்டிருந்தான். ஆனால் அவர்கள் இரண்டு பேரிடம் மட்டும் ஒன்றும் கேக்கவில்லை. கடைசியாக ஐஸ் கிரீம்மை அடைக்கப்பன் பரிமாறிய பொழுது, ஜானகிக்கு வைக்காமல் அவளுக்கு அடுத்த இலையில் வைத்து விட்டு சென்றான்.

“என்னடி ஜானு, உனக்கு ஐஸ் கிரீம் வைக்காம போயிட்டான். கூப்பிட்டு கேக்கலாமா?” என்று கேட்டாள் அவளின் அத்தைப் பெண் வள்ளி.

அதற்கு ஜானகியோ, “வேணாண்டி, கேட்டா அசிங்கமா இருக்கும்” என்றாள்.

அடைக்கப்பன் அதற்குள் 2 ஐஸ் கிரீம்மோடு தன் தேவதையின் எதிரில் போயி நின்று, “ஐயையோ, உங்களுக்கு ஐஸ் கிரீம் வைக்கலையா, சாரிங்க, இந்தாங்க 2 ஐஸ் கிரீம்” என்று கூறி அவள் இலையில் வைத்தான்.

ஜானகி ஒன்றும் சொல்லாமல், தண்ணியை எடுத்துக் குடித்தாள்.

அப்போது அடைக்கப்பன் அவளைப் பார்த்து ஒன்று சொன்னான்.

உடனே, அவளுக்கு பொறை போயி, தண்ணி எல்லாம் மேல சிந்தி, அவனை ஆச்சிரியமாக பார்த்தாள்.

[தொடரும்]

எழுதியவர் : சிட்னி சொக்கன் (23-Oct-13, 9:22 am)
பார்வை : 269

மேலே