+சூடா ஒரு கவிதை பார்சல்+

உணவருந்த உணவகம் சென்றுவிட்டு
வேண்டியதைச் சொல்லி காத்திருந்தபோது
சொன்ன நேரத்திற்குள் உணவு வந்ததோ இல்லையோ
சொல்லாமலே ஒரு கவிதை வந்தது!

பயணக்களைப்பில்
பிள்ளை குட்டி
மூட்டை முடுச்சுகளுடன் ஒரு குடும்பம்!
இல்லத்தரசனுக்கு தலையிலே ஒன்றுமேயில்லை!
நான் முடியைச் சொன்னேன்!!
கடிகாரம் பார்ப்பதும் கதைப்பதுமாக‌
அரக்க பரக்க சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்!

ஒதுங்கி ஒரு ஓரமாய்
ஒரு யுவனும் ஒரு யுவதியும்..
இருவரும் உணவை உண்டார்களோ இல்லையோ
தங்கள் கண்களாலேயே
ஒருவரை ஒருவர் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்!
அதிகமான கண்கள்
அவர்களையே மேய்ந்துகொண்டிருந்ததால்
மேய்பவர்களின் சுவைகளையும் திருடிக்கொண்டிருந்தனர்!

எங்கிருந்துதான் ஊறுமோ..!
நொடிக்கொருமுறை சிரிக்க வைப்பதும்
அடிக்கொருமுறை சிரித்து முடிப்பதுமாய்
ஏதும் இல்லாத இலையில் ஒரு மணி நேரமாய்
சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்!
நீ என்ன ஒரு மணி நேரம் அங்கே செஞ்சேனு
என்னை கேட்டீங்கனா
என்னிடம் பதிலென்று ஒன்றில்லை..
இந்தக் கவிதையைத் தவிர...

வயதான தம்பதி ஒன்று
நினைவுகளில் ஆழ்ந்தவாறே
உணவுகளை அசைபோட்டுக்கொண்டிருந்தனர்..
கீழுமின்றி மேலுமின்றி
இடைப்பட்ட நிலைப்பட்ட உணவகமாதலால்
அளவாக சம்பாதிப்போரும்
ஆங்காங்கே அமர்ந்திருந்தனர்...

சரியாக அடுத்தவேலை
உணவுக்கு மட்டுமே பணமிருப்பவன்
ஒவ்வொன்றின் விலையையும் கேட்டு கேட்டு
பார்த்து பார்த்து
நிறைய சாப்பிட்டான்
வயிறு நிறையாமலேயே..!

கைக்குழந்தையுடன் வந்தவொரு பெரியகுடும்பம்
ஒருவர் மாறி ஒருவர் மாறி
குழந்தையை வைத்துக்கொண்டு
அங்கிமிங்கும் நடைபயின்று கொண்டு
தாங்கள் சாப்பிடும் முறை வரும் வரை
எல்லோர் இலையையும் பார்த்து பார்த்து பசியாறினர்!

அந்த உணவகத்தில்
அதிகமாக வேலை செய்தது
இருவர் மட்டுமே எனத்தோன்றியது..
ஒருவர் நீரூற்றும் வயதானவர்..
மற்றொருவர்...
அடிக்கடி திட்டு வாங்கியபடியே
எல்லோரும் சாப்பிட்டுச்சென்றபின்
ஓடியோடி சுத்தம் செய்த சிறுவன்..

எப்போதும் போல‌
சாப்பிட்டு முடித்ததும்
சாப்பாட்டில் அதிகமாக மிச்சம்வைத்து
அதற்காக‌
கொடுக்கப்பட்ட பணத்தின் மிச்சத்தை
ஏதும் வைக்காமலேயே எடுத்துச்சென்றனர் சிலர்..
அவர்களுக்கு பரிமாறியவர்கள்
வாய்க்குள்ளேயே முனகியவாறு
தங்கள் வெறுப்பை வெளிப்படுத்தினர்..!

கல்லாவில் அமர்ந்திருக்கும்
எல்லா மனிதருமே
உருவத்தில் பெருத்திருப்பதாகவே தோன்றுகிறது!
வேலை எதுவும் செய்யாமல்
உட்கார்ந்த இடத்திலிருந்தே
சம்பாதிக்கும் இவர்
கூடவே பெரிய உடம்பையும் சம்பாதித்துவிடுகிறார்!

இப்படியாக
எனது அன்றைய உணவுவேளை
இனிதாக முடிவுற்றது...

நன்றி... மீண்டும் வருக!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Oct-13, 3:38 pm)
பார்வை : 154

மேலே