கரை திரும்பாத படகு

அலையோடு விளையாடி
உடல் நனைஞ்சு போனோமே!
கண்ணீரில் நனையுறேன்
கண்ணாளன காணாம !

கரையில கைபற்றி
கால்தடம் பதிய நடந்தோமே
ஒத்தையா
நான் நடக்குறேன்
உங்க கால்தடம் மறஞ்சதென்ன

வலைய தான் நான் பின்னயில
என் கூந்தல தான் கலச்சிரே
காத்துல தான் கலையுதையா
கட்டிவிட வாருமையா

நீ வச்ச பொட்டு
கரைஞ்சு தான் போகுதையா
செந்தூரம் வைக்க தான்
சீக்கிரமா வாருமையா

பிள்ளைக்கு நிலாச்சோறு உட்டயில
மடியில தான் படுத்திரே
மடியும் இப்ப கனக்குதையா
மார்நெஞ்சு துடிக்குதையா

பிள்ளையும் அழுதபடி
உன்னை தான் கேக்குதையா
எட்டு திசை இருக்க
எந்த திசை நான் சொல்ல

எல்லை நீ தாண்டுனேனு
ஆர்மிக்காரன் சுட்டானா ?
படகோட உன்னையும் தான்
பினைகைதி ஆக்கினனா
என்ன பதில்
பிள்ளைக்கு நான் சொல்ல?


பிள்ளை அழுகுதையா
எப்படி நான் சொல்ல
அப்பன் வந்ததான்
அடுப்பு இங்க எரியுமுன்னு

ஆட்சி இங்க மாறுதையா
காட்சி இன்னும் மாறலைய்யா !

அலைகடல் நடுவுலே
எங்க உயிர்
வாடுதையா

உன்னோட பிள்ளை
கடலம்மா
பத்திரம்மா
கரையேத்தி விட்டுரம்மா
காத்திருக்கு பிள்ளைக்கு
அப்பன தான் தந்திடம்மா

கரைதிரும்பும்
படகில்தான் என்
உயிரும் வாழுதம்மா

எழுதியவர் : பாண்டிய இளவல் (மது) (8-Nov-13, 12:22 pm)
பார்வை : 105

மேலே