ஒருதலைப் பெண்ணியவாதி

பெண்ணியம் என்பது பெண்களின் உரிமைகள் பறிபோகாமல் காப்பதும், அவர்களுக்கு எதிரான செயல்களைத் தட்டிக் கேட்பதும் தான். இது பெண்ணியத்தின் சிறு விளக்கம்.

அரசவையில் கூடியிருந்தவர் முன்பு கூச்சம் கொஞ்சமும் இன்றி பெண்மையை அவமானப் படுத்தியவர்களை பழிவாங்கச் சபதம் எடுத்த பாஞ்சாலி தகுந்த நேரம் வந்ததும் துஷ்டர்களைத் தண்டித்து அவர்குருதி அள்ளித் தடவி கூந்தைலை முடிந்தாள் பழிதீர்த்த கையோடு. கவுரவர்கள் மட்டுமா பெண்மைக்கு களங்கத்தைப் பூசினார்கள்? பெண்ணைப் பரிசுப் பொருளாய்த் தாயிடம் காட்டியவன் செய்தது சரியா?
என்ன பரிசென்று பார்க்காமலே அல்லது கேட்காமலே பிள்ளைகள் ஐந்து பேரையும் பகிர்ந்து கொள்ளச் சொன்ன தாய் நல்லவளா? தெரிந்தபின் தான் சொன்னதைத் தவறு என்று திருத்தி இருக்கலாம் அல்லவா?
”பரிசு”ஆக வந்தவள் பெண்ணென்று தெரிந்திருந்தும் அவளை மணக்கத் துணிந்த ஆண்மக்கள் அனைவரும் நல்ல ஆண்மகன்கள் தானா? அதை அனுமதித்த தாய் ஒரு நல்ல பெண் தானா? அரசவையில் தன்னை கூனிக் குறுக வைத்து மானபங்கப் படுத்தியவர்களை தண்டிக்க சபதம் எடுத்தவள் பெண்ணைப் பரிசு/போகப் பொருளாக மதித்துப் பகிர்ந்து கொண்டவர்களையும் அதை அனுமதித்த தாயையும் ஏன் தண்டிக்க எண்ணவில்லை? பாண்டவர்களும் அவர்களைப் பெற்றவளூம் போற்றத் தக்கவர்களா? மனைவியை வைத்து சூதாடியவன் தர்மராசனா? பாஞ்சாலி அவர்களைக் கடிந்து கொண்டாளா? பாஞ்சாலி ஐந்தரை அறிவு கொண்டவளா?

கவுரவர்கள் பாண்டவர்கள் இருபிரிவினருமே ஆணாதிக்கவாதிகள் என்பதைப் பெண்ணியவாதிகள் மட்டுமல்ல ஆண்கள் பெண்கள் அனைவருமே ஒப்புக்கொள்வார்கள்.
பாஞ்சாலி தன்னை கவுரவர்கள் மட்டும்தான் அவமானப்படுத்தினார்கள் என்று எண்ணியது சரியா? அவள் அவமானப்பட காரணமானவர்கள் தன் கணவன்மார்களும் தனது மாமியாருந்தான் என்பதை அறியாத அறிவிலியா? அவர்கள் ஐவரும் மணக்க முடிவு செய்தபோதே ஏன் தனது எதிர்ப்பைக் காட்டவில்லை? இந்த வினாக்களை யாராவது எழுப்பியிருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. மகாபாரததில் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை இருந்தால் என்னிடமும் இதைப் படிப்பவர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (27-Nov-13, 8:03 pm)
பார்வை : 228

மேலே