தேடல் தடங்கள்
எதிரெதிர் படிமங்களின்
பிம்ப முடிவிலிகளாய்,
நினைவுகளில் தளும்புவதனைத்தும்
நினைவுகளுக்கான தேடல்களே..
வெற்றிகளுக்கான தேடலில்
தோல்வியென்ற முடிவானது,
முடிவுகளுக்கான தேடலின்
வெற்றியாக - மீண்டும் தோற்கிறேன்.
மறந்தவைகளைத் தேடும்
தேடலின் முடிவுகள்,
மறந்தவைகளை
மறப்பதாகவே உள்ளன..
வழித்தேடல்களில் புலப்படும்
இடுக்கில் ஒளி தெறிக்கும்,
கதவுகள் அனைத்தும்,
என் பக்கமாகவே திறக்கின்றன.
நீண்டு வளையும்
தேடல் பாதை பிரயாணங்கள்,
நிறைவு பெறுகிறது
என் முதல் கால் தடங்களில்.
இறகடித்துத் திரியும்
மின்மினிப்பூச்சியாய்,
இருள் தேடும் எனக்கு
அது கிடைப்பதேயில்லை.
எனக்கான தேடல்களனைத்திலும்,
தேடுபவனாகவும், தேடும் பொருளாகவும்
நானே இருப்பதால்,
நான் காணும் முதுகுகள்,
எனதாகவே இருக்கின்றன.