வியர்வைத் தவம்

தாய்மையின் மறுபாதி நீ
அன்பின் அடைக்கலம் நீ
அடி வைத்த சாலையெங்கும்
சங்கடம் கண்டபோதும்
சங்கடபடவில்லை உன் மனது
அன்று பதினாறு பருவ வயதினில்
தகப்பனற்ற குடும்ப சுமை
சுமக்க நீ கூடை
சுமந்தாய்
இன்று உன் மூத்த வாரிசுக்கு
இருபத்தாறு வயதாகியும் நீ
இறக்கி வைக்கவில்லை
அந்த கொழுந்து கூடைதனை...!
நீ இரவுபகல்
பாரபட்சமின்றி
தேயிலை சாறுதனை
தேனாக்கினாய்
மறுபுறம்
எம் கல்விக்கோர்
கலங்கரை விளக்கமானாய்
நீ காணாத உலகை
நீயே எமக்கு காட்டினாய்
முட்பாதையில் நீ நடந்து
ரோஜாக்களை எம்
பாதையில் தூவி விட்டாய்
தோல்விக்குள் யானும்
சங்கடப்பட்டு கிடக்கையில்
நீ சொல்லும் ஆறுதலே
என் வேதவாக்கு
உன் வியர்வைத்துளியில்
பூத்த ரோஜா யான்
இருந்தும்
காயப்படும் முட்களை
அகற்ற முடியாத பேதை யான்
அன்று நீ யோசித்திருந்தால்
இன்று
நானும் ஓர்
கூடை சுமந்து
உன் சுமை
குறைத்திருப்பேன்
ஆனால்
நீ ஒரு விதி
செய்துவிட்டாய்
கல்வியினிலே எனை
கழகமேற்றிவிட்டாய்
நீ கடந்துவந்த
சாதனைகளை
உன் உடம்பின்
எலும்பு சொல்லும்
உன் தோல்விகளை
விழுந்து விட்ட
உன் பற்கள் சொல்லும்
எண்ணிப் பார்க்கையில்
எவரெஸ்ட்டும்
சிறு புள்ளியாகிறது
உனை விட
உனை பார்த்ததிலிருந்து
அடுத்த ஜென்மமொன்று
யாசிக்கவில்லை
இருந்தும் அடுத்தொரு
பிறவி
இவ்வையகத்தில்
வாய்க்குமெனில்
யானுமே உனக்குமே
தாயாய் இருந்து
தவமியற்றிட வேண்டும்
என்றும் உன்
மகளென கர்வமுறும்
இவள்
ஜீவஜோதி

எழுதியவர் : JJ (14-Dec-13, 5:02 pm)
பார்வை : 341

மேலே