கவிக்கோலம்

மார்கழி முப்பதுநாளும்
வாசலில் விழாக்கோலம் !

வாடை வாட்டினாலும்
வாடாத வசந்தகாலம் !

மங்கையர் கைவண்ணம்
முற்றத்தில் அரங்கேறும் !

மாவிலைத் தோரணமும்
மாக்கோலம் அலங்கரிக்கும் !

தோட்டத்துப் பூக்களெல்லாம்
கோலங்களில் மலர்ந்திருக்கும் !

விருட்சக் காய்கனியும்
வீதிதனில் கனிந்திருக்கும் !

கானகத்து விலங்குகளும்
சாலையோரம் நடமாடும் !

ஆநிரையும் ஆர்வமுடன்
வீட்டின்முன் விளையாடும்!

பட்சிகளும் மீனினமும்
புள்ளியிலே துள்ளியாடும்!

பதுமையும் பாவையும்
பவிசாக பவனிவரும் !

கடவுள்கூட சிலநேரம்
கண்முன்னே காட்சிதரும் !

எண்ணங்கள் வெளிப்படுத்த
வண்ணங்கள் எழிலூட்டும் !

விடியலில் விரல்சிற்பம்
விதவிதமாய் தினம்சிரிக்கும் !

அற்புதமானது கோலக்கலை !
அணங்குகளுக்கது கைவந்தகலை !

திறமைகண்டு வணங்குவோம்தலை !
ஈடில்லாகலைக்கு ஏதுவிலை ......???

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (14-Dec-13, 8:09 pm)
பார்வை : 1667

மேலே