குறிஞ்சி நிலக்கூடல்

கூதிர்கால மலையருவியில்
குறிஞ்சிமலர் சூடி
மயிலாட்டமாடும்
குறத்தியர் குலமகளோ !!
முன்பனிக்காலத்தில் சுனையருகே
சந்தனமரத்தில் வீற்று
கிள்ளை மொழி பேசியே
யாழிசைத்த மலையரசியோ !!
சிறுகுடியில் பிறந்து
வேங்கையுடனே
வேங்கை மலர்பறித்த
கொடிச்சியர் குலமகளோ !!
அன்றொருநாள் அகில்மர
நிழலிலே கண்ட
காந்தள் மலர்பூண்ட
காந்தவிழிக் கானவர் குலத்தவளோ !!
வேங்கைமர உச்சியிலே
தேனெடுக்கும் பொழுது
அங்கே கிழ்ங்ககழ்ந்த
வண்ணமயில் பெண்ணரசியோ !!
தைத்திங்களிலே
தினை, மலைநெல்
மூங்கிலரிசி கொண்டு
அமுதுபடைத்த வாலைக்குமாரியோ !!
அன்றேல்
கார்த்திகைத் திங்களிலே
கார்த்திகேயனுக்காய்
குறிஞ்சிப்பண் இயற்றிய
தரணிப் பெண்ணவளோ !!
நித்தம்
யாமப்பொழுதில்
நின் நித்திரையிலும்
நினைவினிலும்
குடிகொள்ளும்
கூடல்கொள்ளும்
குறிஞ்சிப்பெண் யாரவள்
குறிஞ்சித்தலைவனே ??