அகம் நிறைந்த அகன்

என்னருமை நண்பர்களே
.....என்னுரையை கேட்பீரோ
பொன்னழகு புண்ணியவான்
.....பெருமையை அறிவீரோ

வெண்ணிலவின் பொன்னொளியாய்
.....நிலவியெங்கும் வருகிறாரே
மண்ணுலகில் தன்னிருப்பை
.....நிதர்சனமாய் நிறைக்கிறாரே

கண்ணொளியை தன்வழிக்கு
......கொண்டிடவே நினைத்தாரா
எண்ணம்மிகு கலைக்குள்ளே
.....ஆய்ந்திடவே திறந்தாரே

வண்ணம்மிகு கற்பனைகள்
......வடித்துத்தான் மாய்ந்தோமே
இன்னுமொரு முறையேனும்
......படிக்கத்தான் நேர்ந்தோமா

சின்னதென்றும் சீரியதென்றும்
.....வகைவகையாய் வளர்த்தோமே
இன்னதென்று நினையாமல்
.....அத்துடன்நாம் மறந்தோமே

கதையென்றும் கவிதையென்றும்
.....கருத்தென்றும் சமைத்தோமே
அதையென்றும் அலுப்பின்றி
......மனமினிக்க ருசித்தோமா

எழுதியதுவும் எண்ணியதுவும்
......எண்ணத்திலே நிற்கிறதா
நழுவியதுவும் விலகியதுவும்
......நமைத்திரும்ப வைக்கிறதா

அக்கணத்தில் அருமையென
.....பெருமையெனப் பதிந்ததும்
இக்கணத்தில் எவ்விடத்தில்
......புதைந்ததெனத் தெரிந்தோமா

தென்றலான தேன்மலரான
.....செந்தமிழ்ப் பாக்களதை
மன்றத்திலே தூக்கிவைக்க
.....மனதளவில் நினைத்தோமா

ததும்பியதும் வெதும்பியதும்
.....கணக்கின்றிக் கிடக்கிறதே
பதுங்கியதும் புலம்பியதும்
.....மறுபிறப்பைக் கண்டதுண்டா

எனக்கென்றும் உனக்கென்றும்
.....நேரங்காலம் போதவில்லை
எனத்தானே நாம்சொல்லியே
.....பேசிக்கொள்வோம் நம்பெருமையே

ஆயிரமாயிரம் கண்ணிருந்தால்
.....ஆரய்ந்து பார்த்திடலாம்
பாயிரமாயிரம் லட்சமிருக்க
.....பகுத்தறிந்தது இருவிழியோ

எப்படித்தான் அத்தனையும்
......படித்துத்தான் பார்த்தாரோ
தப்பிக்காத மொத்தத்தையும்
......கரைத்துத்தான் குடித்தாரோ

என்னகென்ன பாதைதான்
.....என்பதைத்தான் சொன்னாரே
உனக்கென்ன மேன்மையென
......உள்ளதைத்தான் உரைத்தாரே

தனியொருவன் செய்தபணி
.....தரணியெங்கும் எட்டிடுதே
இனியொருவன் இதைவிடவும்
.....செய்யும்வழி கிட்டிடுமா

பகுத்தறிந்து விருதுகளை
......பாங்குடனே வழங்கினாரே
தொகுத்தறிந்த வள்ளானுக்கு
......நன்றிக்கடன் ஆற்றுவமே

"பண்புநிறை கலைச்சிற்பி"
......என்றதொரு விருதினையே
அன்புநிறை தளத்தாரே
.....அகனார்க்கு அளிப்போமே !!!
*************************************************
குறிப்பு: இதுவரை எந்தப் படைப்பாளியைப் பின்பற்றியும் நான் எழுதியது இல்லை. [சில வேளைகளில் நம்மில் சிலர் ஒருமித்த சிந்தனையை படைப்பாகப் பதிவு செய்வது வேறு விசயம். அது தவிர்க்க முடியாதது] முதன் முறையாக. k.p.ஐயா எழுதிய "பெரிய மனத்தான் பாரியகான்" என்ற கவிதையின் தாக்கத்தில் இந்தப் படைப்பை வடித்துள்ளேன். அதற்காக k.p. ஐயா அவர்களுக்கு என் நன்றி.

"நட்புணர்வு மிளிர் வரியாக்க நன்மணி"
ரத்தினமூர்த்தி

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (22-Dec-13, 11:54 am)
பார்வை : 289

மேலே