பயிர் காக்க வருவீரோ

வாயக்கட்டி வயித்தக் கட்டி
வட்டிக்குத்தான் காச வாங்கி
உரத்த வாங்கி மருந்த வாங்கி
சீம வெத நெல்ல வாங்கி..

வீசுன மணி ஒவ்வொண்னும்
வெடிச்சுத்தான் மொலச்சு வர
நாத்து நடும் வயசு வந்தும்
புடுங்கி நட ஆளு இல்ல..

மூணு ஊரு தேடிப் போயி
நாலு பேர கூட்டி வந்தேன்
கேக்குற கூலிக்கெல்லாம்
கெடா ஆடா ஆட்டி நின்னேன்..

நான் நட்ட பயிறு எல்லாம்
பொறந்த வீடு விட்டு இப்ப
புகுந்த வீட்டில் நிக்குதுங்க..

நெலத்துத் தண்ணி விட்டு விட்டு
வளந்த பயிறு கூட்டமுங்க
நீல வான கொடையப் பாத்து
தவம் கிடந்து நிக்குதுங்க..

காணி நிலம் காஞ்சி போயி
கரு கலஞ்சு நிக்கும் முன்ன
கருத்த முடி காரவுரே
ஒங்க கண் திறந்து பாப்பீரோ..

வாடும் பயிறு பக்கத்துல
இந்த உசுரும் வாடி நிக்குதய்யா..

ஐயா.. ப(உ)யிர் காக்க வருவீரோ..

எழுதியவர் : வெ கண்ணன் (31-Dec-13, 10:30 am)
பார்வை : 108

மேலே