நேர்காணல்
தொலைக் காட்சி நிருபர்;
வணக்கம் நேயர்களே. நமது "கற்பனை" தொலைக் காட்சி வாயிலாக மீண்டும் உங்களைச் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைய நேர்காணல் நிகழ்ச்சியில் நம்முடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிப்பவர் முன்னணி எழுத்தாளரும் சமூக சிந்தனையாளருமான திரு. சிந்தனைக் களஞ்சியம் அவர்கள். இப்போது அவருடன் இணைந்து கொள்ளலாம்.
தொலைக் காட்சி நிருபர்; “
ஐயா வணக்கம். இந்த நிகழ்ச்சியின் வாயிலாக உங்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தமைக்காக மிக்க மகிழ்ச்சி. உங்கள் வாசகர்களின் சார்பாகவும் நமது "கற்பனை" தொலைக்காட்சி நேயர்கள் சார்பாகவும் முதலில் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்”
சிந்தனைக் களஞ்சியம்;
அனைவருக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொ.கா.நி; ஐயா இப்போ நமது பேட்டியைத் துவங்கலாமா ?
சி.க; துவங்கலாம் . முதல்ல எங்க ஊருக்கு வந்திருக்கீங்க...இந்தாங்க தண்ணி குடியுங்க... இதுதானே நம்ம பண்பாடு...
தொ.கா.நி.;
நன்றி ஐயா.
எந்த வயசிலர்ந்து எழுதிட்டு இருக்கீங்க. அது எப்படி நேர்ந்தது அப்படின்னு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க ஐயா.
சி.க;
எந்த வயசிலர்ந்து எழுதறேன்னு சொல்றதவிட என்ன எழுதிட்டு இருக்கேங்கறது தான் முக்கியம். நாற்பது வருசமா எழுதிட்டு இருக்கேன். மனசில பதித்த விசயங்கள எழுதறேன் பாதிச்சது மாட்டும் இல்லாம யோசிச்சதையும் எழுதறேன். யாரு எதைச் சொன்னாலும் எழுதிறேன் அவ்வளவுதான்.
தொ.கா.நி;
ஐயா நம்ம நிகழ்ச்சிய விளம்பர இடைவேளைக்குப் பிறகு தொடரலாம்.....
சி.க.; என்ன விளம்பரத்துக்கு இப்போ அவ்வளவு அவசரமோ போங்க..
*********
தொ.கா. நி.;
விளம்பர இடைவேளைக்குப் பிறகு மீண்டும் உங்களுடன் இணைகிறோம் நேயர்களே. ஐயா.... நம்ம விளம்பரத்துக்கு முன்னாடி.....
சி.க;
முன்னாடியும் வேண்டாம் பின்னாடியும் வேண்டாம்... கேள்வியக் கேளு....
தொ.க. நி;
ஐயா நீங்க கோபக்காரர்னு கேள்விப் பட்டிருக்கேன். எனக்காகக் கொஞ்சம் பொறுத்துக்குங்க ஐயா... நிகழ்ச்சிய கோடிக்கணக்கான மக்கள் பார்த்திட்டு இருக்காங்க.. அதனால...
சி.க;
எதையும் மக்கள் நெனைக்க மாட்டாங்க.... நீங்க கேளுங்க....
தொ.கா.நி;
நீங்க எதை மையமா வெச்சு எழுதறீங்க...
சி.க. இது தேவை இல்லாத கேள்வி...
தொ.கா.நி; எப்படி ஐயா இப்படி சொல்றீங்க...?
சி.க; நீ என்னோட படைப்புகளைப் படிச்சிதல்லையா ?
தொ.கா.நி;
நிறையப் படிச்சிருக்கேன்.. இருந்தாலும் மக்கள் அத தெரிஞ்சிக்கணும் உங்க வாயால அதச் சொன்னா நல்லா இருக்கும், அதனால கேட்டேன் ஐயா. சரிங்க ஐயா. ஒரு விளம்பர இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நம்ம பேட்டியைத் தொடரலாம்...
சி.க;
இப்போ நாம என்னோட கிராமத்திலதானே இருக்கோம். அதுவும் வேப்ப மரத்து நிழல்ல உக்காந்திட்டு பேசிட்டு இருக்கோம். எதுக்கு உனக்கு விளம்பரம்...
தொ.கா.நி;
இது தொலைக்காட்சி நிலையத்தோட சம்பிராதயம் ஐயா
சி.க; எல்லாம் எனக்குத் தெரியும் விடு.. அப்புறமா பேசலாம்.
*********
[விளம்பர இடைவேளைக்குப் பிறகு]
தொ.கா.நி;
நேரடியாவே கேள்விக்கு வர்றேன் ஐயா. ஒரு கவிதையோ கதையோ நாவலோ., அது எப்படி இருக்கணும்னு நினைக்கறீங்க ?
சி.க;
நான் எப்படி இழுதி இருக்கேனோ அப்படி இருக்கணும்.
தொ.கா.நி;
நான் மாத்தி கேட்டு இருக்கணும்., அதாவது அடுத்த தலைமுறை எப்படி எழுதனும்னு நெனைக்கிறீங்க?
சி.க.;
அவனுக்கு என்ன தோணுதோ அத எழுதலாம். அவனோட பாணியில தாராளமாக எழுதலாம். ஆனா ஆரம்பிச்ச இடத்திலேயே நின்னுட்டு இருக்கக் கூடாது
தொ.கா.நி;
ஐயா இந்த இடத்தில எனக்குப் புரியலையே....
சி.க; அதாவது., அடுத்த கட்டத்துக்கு முன்னோக்கிப் பயணிக்கணும். நம்மை இன்னும் மேம்படுத்தணும். நிறையப் படிக்கணும். குறைவாப் பேசணும்.
தொ.கா.நி; ஐயா அடுத்த கேள்வியக்....
சி.க.;
விளம்பரமா...? ஏய்யா பேட்டின்னு சொல்லிட்டு வந்து உயிரை எடுக்கிறீங்க... நான் பாட்டுக்கு சிவனேன்னு எங்க மக்களோட தாயக்கரம் வெளையாடிட்டு இருந்திருப்பேன்.... என்னத்தையோ செய்...
**********
தொ.கா.நி.;
ஐயா விளம்பரத்துக்கு முன்னாடி தாயக்காரம் விளையாடுவேன்னு சொன்னீங்களே... இவ்வளவு பெரிய எழுத்தாளர்... நீங்க.போய்...
சி.க.;
பார்ல உக்காந்து ரம்மி ஆடுனாத்தான் வெளையாட்டா... கம்ப்யூட்டர்ல உக்காந்து கேம் ஆடுனாத்தான் வெளையாட்டா . நான் மக்களோட மக்களா இருக்க விரும்பறேன்... அதுல இருக்கற சுகம்.. ரூம் போட்டு தனிமைல உக்காந்து எழுறதுலயும் இல்ல....
தொ.கா.நி;
இப்போ முக்கியமான கட்டத்துக்கு வரோம்.. இந்த நிகழ்ச்சியோட முக்கியத்துவமே இந்தக் கேள்விலதான் இருக்கு..
ஐயா... ஒரு படைப்பாளின்னா எப்படி இருக்கணும்னு நீங்க நெனைக்கிறீங்க... அப்புறம் ஒரு எழுத்தாளன் தன்னை எப்படி இன்னும் வளர்த்துக் கொள்வது என்பது பற்றியும் சொல்லுங்க....
சி.க.
நான் என் மனதில உள்ளதச் செல்றேன். அத யாரு எப்படி எடுத்துக்கிட்டாலும் சரி. அதுக்காக என்னத் தப்பா நெனச்சிட்டாலும் சரி. நீங்க கேட்டதால சொல்றேன்....
தொ.கா.நி.; இதுல தப்பா நினைக்க ஒன்னும் இல்ல. உங்க கருத்த நீங்க சொல்றீங்க... ஐயா..... அதுக்கு முன்னாடி.........
சி.க. விளம்பரமா...கிழிஞ்சுது போ......
*********
சிந்தனைக் களஞ்சியம் தொடர்கிறார்...........
படைப்பு என்பது அவரவர் கற்பனையின்,சிந்தனையின் பிரதிபலிப்பு. பாதித்ததை, தோன்றியதை, காண்பதை, வருவதை எண்ணி எழுத்தில் கொண்டு வருவது நடைமுறை. அது யாவர்க்கும் உண்டான தன்மை.
எழுத ஆரம்பிக்கிறோம். எழுதிக் கொண்டே இருக்கிறோம். எல்லாவற்றையும் எழுதிக் கொண்டே இருக்கிறோம். இன்னும் எழுதுவோம்...
ஆனால், எதைவேண்டுமானாலும் பதிவு செய்யலாம் என்ற நிலையில் ., ஆரம்ப காலத்தில் நமக்கு வாய்த்த யுக்தியைப் பயன்படுத்தி இன்னும் எழுதிக் கொண்டே இருக்கிறோம். அந்த யுக்தியானது நம்மை இயக்கிக் கொண்டு இருக்கிறது., இதுதான் நமது பாணி என்றும் முடிவெடுத்து எழுதிக் கொண்டு இருக்கிறோம். இதிலிருந்து இன்னும் கொஞ்சம் நாம் மீண்டு வருவது நல்லது. இது எனக்கும் பயனுள்ள ஒரு சிறிய விசயமாக இருக்கும்.
ஒவ்வொரு படைப்பாளிக்கும் வாசகருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையிலும்., அவரின் மனதிற்கு பிடித்தமான வகையிலும் எழுத்தை தொடர்வதென்பது நம்மை இன்னும் கட்டிப் போட்டிருக்கும் செயல் தானே தவிர நம்மை வளர்க்கும் யுக்திக்கு வகையிருக்காது. எல்லோரும் போற்றும் வகையில் நம்மை வளர்த்தல் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
மிகப் பிரம்மாண்டமாய் வளர்ந்து விட்ட உலகில் நம்மைச் செதுக்கும் முயற்சியில் நாம் ஈடுபடவேண்டும் என்பது இந்தக் காலகட்டத்தின் அவசியமாகும்.
மரபுக் கவிதைகள் கூட இப்பொழுது மிக அழகான வார்த்தைகளில் வலம் வந்து கொண்டு இருப்பது என்பது ஒரு மகிழ்வையும் இன்னும் எதிர்பார்ப்பையும் நமக்குத் தருகிறது. அது இலக்கியத்தில் இன்னொரு மைல் கல் ஆகிறது. என்றாலும் என்னைப் போன்றவர்களுக்கு அது எட்டாக் கனியாகிவிட்டது. பயிற்சியும் முயற்சியும் இல்லாமல் போனதால் எனக்குப் பெரும் இழப்புத்தான்.
இந்த நிலையில்., புதுக்கவிதையில் இன்னொரு பரிமாணத்தை எட்ட வேண்டிய சூழ்நிலைக்கு வந்துவிட்டதை எண்ணி நானும் யோசிக்கும் நிலையில் இருக்கிறேன். எது கவிதை எது கவிதையில்லை என்பதைவிட
இனி நாம் எப்படி எழுத வேண்டும் என்பதை சீர் தூக்கிப் பார்க்கும் நிலையில் இன்று இருக்கிறேன்.
சரி கவிதை எப்படி இருக்கவேண்டும். எப்படி எழுதினால் அது கவிதை., என்ற ஒரு கேள்வி உடனே நம் முன் நிற்கிறது. எனது கவிதை கவிதை இல்லையா என்ற கேள்வியும் முன்னால் வந்து நிற்கிறது. நாம் இன்று வரை எழுதியது கவிதைதான். அது பொருள் விளக்கும் பிரச்சாரமாக இருக்கிறது.,. கருவை விளக்கும் காரணியாக இருக்கவில்லை என்பதைத்தான் சொல்லவேண்டியுள்ளது.
எதுவும் கவிதைதான்.... படிப்பவருக்கு புரிந்து கொள்ள வைக்க தொடர்ந்து எழுதிக் கொண்டு இருக்கிறோம். அதைக் கொஞ்சம் மாற்றி அவர்களுக்கு உணர வைக்க முயற்சிக்கலாம் என்பதையே வலியுறுத்திச் சொல்லி இருக்கிறோம். அவ்வளவே.
மேடையிலோ கூட்டத்திலோ படைப்புகளை வாசிக்கும்போது., அவர்களுக்குப் புரிந்து கொள்ளும் வகையில் எழுதி வாசிப்பது என்பது ஒரு வகை. ஆனால்., புத்தகத்திலோ தளத்திலோ நாம் பதிவு செய்யும் விஷயங்கள் எப்போது வேண்டுமானாலும் படித்துப் பார்த்துக் கொள்ளலாம். பலமுறை படித்துத் தெளிந்து கொள்ளலாம். அதனால், கவிதையை முடிந்தவரை அடர்த்தியாக சொற்செறிவுடன் உள்ளார்ந்த அர்த்தத்துடன் படைத்தல் என்பதே நம்மை நிலை நிறுத்தும். இது அடுத்த கட்டத்திற்கு நம்மை இட்டுச் செல்லும்.
வர்ணனைகளைத் தாண்டி வார்த்தைக் கோர்வைகளைத் தாண்டி எழுத்தில் கருவை மையப்படுத்தி படைப்பை வெளிப்படுத்தல் வேண்டும்.
மேலும்.,
கவிதை என்பது புலப்படுத்துதல் அல்லது அறியத் தூண்டுதல் அல்லது உணரவைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்.
அந்த வர்ணனைகளை அப்படியே கவிதைப் படுத்த முயற்சிக்கலாம். அதில் ஒன்றும் பெரிய சிக்கல் வந்துவிடப்போவதில்லை.
நவீனத்துவம் என்பதெல்லாம் நமக்கு வசப்படாதது என்பதல்ல.
கொஞ்சம் முயற்சி கொஞ்சம் தேடல் இருந்தால் இன்னும் நம்மை வளர்த்துக் கொள்ளலாம். நவீனத்துவம் என்பது பெரும் பிரம்மாண்டம் அன்று.
"சொல்ல வந்ததை சொல்லாமல் சொல்வது" என்ற கருத்தை மனதில் இருத்திக் கொண்டால் நமது கவிதைகளும் நவீனத்துவ வடிவம் பெறும் என்பது என் எண்ணம்.
கவிதையின் மையத்தை கவிதையே சொல்லி முடிக்காமல்., வாசிப்பவர் சொல்ல வேண்டும் அல்லது வாசிப்பவர் அறிந்து கொள்ளல் வேண்டும் என்பது சிறிய அசை.
கதையும் அப்படித்தான் எல்லாவற்றையும் விளக்கி விளக்கி எழுதிக் கொண்டு இருக்காமல் இயல்பாய் அதன் போக்கில் விட்டுப் பிடிக்க வேண்டும். கதை சார்ந்த கால கட்டத்தை பின்னூட்டமாய் அமைத்துக் கொண்டே போக வேண்டும். ஒவ்வொரு விசயத்துக்கும் தன்னிலை விளக்கத்தை சொல்லிக்கொண்டே இருக்கக் கூடாது, கதைப் போக்கில் சம்பவங்களை சொல்லிச் செல்வது நலம்.
இதுதான் என் சிந்தைக்கு எட்டிய யோசனைகள். இதுக்குமேலயும் இருக்கலாம்....
தொ.கா.நி.;
மிகச்சிறந்த விளக்கத்தைக் கொடுத்து இருக்கிறீர்கள். இளந்தலை முறைகளுக்கு இது பயன்படும் என்று நினைக்கிறேன். இதுல ஒரு சந்தேகம்... தொடர்ந்து எழுதிட்டு இருக்கறவங்க..உங்களோட கருத்திற்கேற்ப மாறணும்னு நினைக்கிறீங்களா....
சி.க.;
இல்லை. அவுங்க அவுங்க அப்படியே எழுதிட்டு இருக்கட்டும். நான் அவுங்கள மாறச் சொல்லல. மாத்தி எழுதச் சொல்லல சரியா....நிருபரே...
தொ.கா.நி.;
ஐயா இந்த இடத்தில ரொம்பவே இடிக்குதே... புரியலையே...
சி.க.;
நான் யோசனை சொன்னது., எப்படி எழுதலாம்னு யோசிக்கிறவங்களுக்கு... நீ யோசனை கேட்டதுக்கு... உன்னோட பேட்டிக்கு.... புரிஞ்சுதா.... என்ன மாட்டி விட்டுட்டு நீ குளிர் காயாதே....
தொ.கா.நி;
ஹி..ஹி..ஹாஹா...ஹஹ்ஹா....
சி.க.;
பார்த்துப்பா... உலகமெல்லாம் பார்த்துட்டு இருக்கு.... .
தொ.கா.நி.
ஆம் ஐயா... ஐயா... இப்போது.. திருப்பூரில் இருந்து ரத்தினமூர்த்தி இணைப்பில் இருக்கிறார்... அவரின் கருத்துக்களையும் கேட்போம்... மூர்த்தி சார் இணைப்பில் இருக்கிறீர்களா.?
ரத்தினமூர்த்தி;
இருக்கேன். சொல்லுங்க....
தொ.கா.நி.;
சிந்தனைக் களஞ்சியம் ஐயாவின் கருத்தோடு நீங்க ஒன்றிப் போறீங்களா....?
ர.மூ.
அது அவரின் கருத்து. அதை ஆதரிக்கவோ மறுக்கவோ என்னால் முடியாது. ஏன்னா நானும் ஒரு எழுத்தாளன். என்னை நீங்க வேண்ணா தனியா பேட்டி எடுங்க சொல்றேன்....
தொ.கா.நி.;
உங்கள் கருத்தை எதிர்பார்த்தோம்... ஐயாவிற்கு என்ன கோபமோ தெரியவில்லை. சரி நேயர்களே இத்துடன் நமது நேர்காணல் முடிவடைகிறது. இன்னொரு சிறப்பு நிகழ்ச்சியில் நமது முக்கியப் பிரபலம் ஒருவருடன் நேர்காணல் இருக்கும், அப்போது சந்திப்போம்..இதுவரை நிகழ்ச்சியை சிறப்பித்துத் தந்த சிந்தனைக் களஞ்சியம் ஐயாவிற்கு நன்றி. வணக்கம்.
சி.க.
எல்லோருக்கும் நமஸ்காரம்.
********** .