அன்புள்ள அம்மாவுக்கு

அன்பெனும் மடலெடுத்து ஆசையெனும் எழுதுகோல் பிடித்து-அதில்
பாசமெனும் மையை ஊற்றி நெஞ்சில் நேசமுடன் எழுதுகிறேன்...

உயிர் கொடுத்து, உருவம் கொடுத்து, உறுதுணை கொடுத்து-என்னை
உத்தமனாய் உயர வைத்த என் உயிரிலும் உயர்ந்த தெய்வம் என் அம்மாவிற்கு
என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

சுவையான மடலொன்றை கடையில் வாங்கி அனுப்ப-அதில்
சுவையொன்றும் இல்லை அம்மா,
அழகான பூவொன்றை அன்புடன் உன்கையில் கொடுக்க
பிரயாணம் ரோம்ப தூரம் அம்மா,
பொய்யான பொருளொன்றை காசு கொடுத்து வாங்க
என்னிடம் கணிச பணம் இல்லை அம்மா,
தூய்மையான இதயமொன்றை சொற்களால் அனுப்புகிறேன் -அதைத்
தந்தவளும் நீயே அம்மா.

நாளும் பொழுதும் விழித்து என்னை நல்லவனாய் வாழவைத்தாய்,
கட்டளைகள் சில போட்டு கடமைகளை அதற்கொதுக்கி,
கண்டிப்புகள் சிலவற்றால் என்னைக் கண்ணின் மேல் இமை காத்தாய்,
காலம் முழுதும் வாழ்ந்தாலும் என்னை நீ வளர்த்த கடன் தீராதம்மா.

தாரமொன்றும் வேண்டாம் இத்தரணியில் உன் தாயன்பு போதுமம்மா,
பாரமொன்று வேண்டாம் இப்பாரினில் உன்பாசம் போதுமம்மா,
எழுத்தறிவித்தவன் இறைவனென்றால் - அந்த
இறைவனேயே எனக்கறிவித்தவள் தெய்வம் நீதான் அம்மா.

நண்பர்களின் சகவாசம் நாம் நலமாக உள்ளவரை,
காதலியின் அகவாசம் நாம் அழகாக உள்ளவரை,
உறவுகளின் உறவாசம் நம் கையில் காசு உள்ளவரை,
அம்மா உன் உயிர்வாசம் என் உயிர் உள்ளவரை.

ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும் நீதான் எனக்கு அம்மா,
மறுபிறவி எடுத்தாலும் நான் தான் உனக்கு மகன் அம்மா.


கண்ணை இமை காக்க, இமை இரண்டை யார் காக்க,
என்னை நீ காக்க, உன்வாழ்னாளை நான் காக்க,
இவ்வாக்கியத்தை நீ பார்க்க, சத்தியத்தை நான் காக்க-என்
கடைசிக்காலமெல்லாம் உன்னுடன் தான் நான் அம்மா

எழுதியவர் : கௌதமன் (4-Feb-11, 6:37 pm)
Tanglish : anbulla ammavuku
பார்வை : 918

மேலே