பாமாலை தீர்த்த னுக்கே

பண்களைப் பறவை பாடப்
==பசுமைசேர் தாவ ரங்கள்
மண்ணிதை அழகு செய்ய
==விலங்குகள் அதனைக் காக்க
விண்ணுள தோட்டக் காரா!
==விடியலைப் பூக்க ளாக்கிக்
கண்ணிலே நிதமும் காட்டிக்
==களிப்பெனுள் கூட்டு விப்பாய்!

கட்டுகள் யில்லா அன்பைக்
==காட்டியே உதவி செய்வாய்!
குட்டுகள் கொடுத்த போதும்
==குனிந்தெனைத் தூக்கிக் காப்பாய்!
தட்டி,நீ கொடுத்து விட்டால்,
==தளர்ந்து,நான் போகப் போமோ?
எட்டி,நீ நில்லா தென்னை
==என்றுமே நடத்தும் அய்யா!
(வேறு)
வருசம் பலவந்தும் வயதொன்றே ஏறியது!
புருசன் எனவாகேன்! புண்ணியனே! நீவந்து
குருசைச் சுமந்ததிலே குற்றுயிராய்க் கிடந்திட்ட
பரிசை நினைத்தும்,உன் படியேறி உய்கிலனே!
(வேறு)
உள்ளும் புறமும் அறிந்தவரே!
=உதறிச் செல்லாக் கையினரே!
கள்ளம் உள்ள கபடமனம்
=கண்டும் ஒதுக்காக் கருணையரே!
வெள்ளம் போலப் பாய்ந்துவரும்
=விடியல் காட்டும் நாயகரே!
பள்ளம் விட்டெ எனைத்தூக்கிப்
=பதவி கொடுத்தே காத்திடுமே!
(வேறு)
சிக்கலே வாழ்க்கை யென்றால்
==சிந்தனை நன்ம லர்கள்
சிக்கலுள் வைத்துக் கட்டிச்
==சிறந்தவோர் மாலை செய்யப்
பக்கலில் வந்து நில்லும்!
==பணிவுடன் ஏவல் கேட்பேன்!
திக்கெலாம் புகழ்,என் னோடும்
==தீர்த்தன்,உம் பெயர்க்கும் ஆமே!
= ===

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (11-Jan-14, 8:43 pm)
பார்வை : 119

மேலே