ஒரு நிமிடம்,நான் மனசாட்சி பேசுகிறேன்

தற்கொலையின்
விளிம்பில் நிற்கும் மனிதா...
ஒரு நிமிடம் ... நான் உன் மனசாட்சி பேசுகிறேன் !
நான் எவ்வளவோ சொல்லியும்
உன் முடிவை நிறைவேற்ற
முழு மூச்சாய்
முயன்று கொண்டிருக்கிறாய் !
யோசித்துப் பார் ...
நீ அடைந்த தோல்வியை
வெற்றியாக மாற்ற
எப்போதாவது
இப்படி முயன்றிருக்கிறாயா?
கோழைகள் தான்
தற்கொலை செய்து கொள்வார்களாம் !
யார் சொன்னது ?
கோழைகளின் குலைகள் நடுங்கும்
அதனால் அவர்கள்
தற்கொலையை தன் பேச்சோடு
நிறுத்தி விடுவார்கள்!
நீ
கோழைகளின் வார்த்தை !
அது தான்
யோசிக்காமல் வந்து விழுந்து விடும் !
அப்படித்தான்
இப்போது நீயும்
விழப் போகிறாய்
தற்கொலை அரக்கனின் வாயில் !
இந்நேரத்தில்
மனதிற்கு நீ அடிமையானால்
அது மரணத்தை தான் நாடி ஓடும் !
ஏன் தெரியுமா ?
நீ யோசிக்காத போது
துடிப்பு கூட
அதற்கு பெரும் வெடிப்பாய் தெரியும் !
யோசி ...அந்த துடிப்பை
எப்படி துடுப்பாக்கலாமென்று !
இது வரை
நீ எதிர் கொண்ட தோல்விகள் எல்லாம்
கொத்தி மணலில் விழுந்த
ஒரு சிறு மழைத்துளி தான் !
இப்போது
நீ எதிர் கொள்ளப்போகிற
இது தான்
பெரும் குளத்தில் விழும்
சிறு துளி விஷம் !
என்னைப்பொறுத்தவரை
இது தான்
உன் உண்மையான தோல்வி !
தோற்றவர்களுக்கெல்லாம்
தற்கொலை தான் முடிவென்றால்
முகமது நபி , புத்தர், ஏசு
இப்படி யாரையுமே
நாம் இன்று
பின்பற்றிக்கொண்டிருக்க மாட்டோம் !
அன்று தோற்றவர்கள் தான்
இன்று அபார வெற்றிப் பெற்றவர்கள்!
வெற்றி காணப் போகிறாயா?
இல்லை வெற்றிடம்
காணப் போகிறாயா?
ஒரு நிமிடம் யோசி!
தோல்வியையும் நேசி!