கைநாட்டுக் கவிதைகள் 34

பால்மரக் காட்டில்!
தமிழனுக்கு
'பிறக்க ஒரு நாடு
பிழைக்க ஒரு நாடு'ன்னு
பராசக்தி வசனம்போல
நம்ம.... கணேசனும்
கல்யாணத்துக்கு
வாங்கிய கடன்
கழுத்தை நெறிக்க
காரைக்குடி ஏசண்டுகிட்ட
அறுபதாயிரம் கொடுத்து
கனவுகள் சுமந்து வந்தவன்
பால் வடிக்கும்
ரப்பர் தோட்டத்தில்
கண்ணீ­ர் வடிக்கும்
இந்தியத் தொழிலாளி....
மோகம் முப்பது நாள்
ஆசை அறுபது நாளாம்
ஆனால்,
அதுக்குள்ளாகவே
விசா வந்துவிட
விசும்பி அழுத
புதுப்பொண்டாட்டிக்கு
ஆறுதல் சொல்லிவிட்டு
ஆகாய விமானம் ஏறியவன்
இப்போது
செரம்பான் தோட்டத்தில்!
காலம் புரண்டோடியது.....
காதலை தன் மனைவியோடு
கடிதங்களால் தொடர்ந்தான்
சம்பளத்தேதியில் மட்டுமே
பொஞ்சாதி குரலை
ஃபோனில் கேட்பான்
உழைப்பாளிகளுக்கு
உலக உருண்டை
வேகமா சுத்தும் போல....
ரெண்டு வருசம் கழிஞ்சது....
கணேசனின்
'அந்த'
ரெண்டுமாசத்துக்கு
அங்கே மனைவி
மகனைப் பெத்தெடுக்க
இந்த
ரெண்டு வருச
உழைப்புக்கு
மேலும்
ரெண்டு வருசம்
பணி நீட்டிப்பு
பலனா கிடைச்சது!
ஆச மகனின்
அழுகை ஓசைய
தொலைபேசியில்
கேட்கும்போதெல்லாம்
வெடிச்சுக் கிளம்பும் அழுகைய
சிரிச்சு மறைப்பான்
எல்லா கடனையும் அடைச்சாச்சு....
இனிமே உழைக்கிறது
எம்பொண்டாட்டி, புள்ளைக்குத்தான்
உற்சாகமா
ரப்பரையும் வேர்வையும்
ஒன்னா வடிச்சான்
இருந்தாலும்,
ஒரே ஒரு முறை
மகனப் பாக்கணும்னு
மனசு கெடந்து அலைபாயுது
முதலாளியும் லீவு தர மாட்டாரு
ஒரு வேளை தந்திட்டாலும்
ஏரோபிளேன் சார்ஜிக்கே
ஒரு மாசம் சம்பளம்
செரிச்சுபோகும்
குழம்பிய மனசோடு
அரைத் தூக்கத்தில்
இருந்தவனை
அதட்டி எழுப்பினாரு
முதலாளி
உன்னோட அப்பா
இறந்துட்டாராம்
போன் வந்துச்சு
இந்தா பிளைட் டிக்கட்டு
ஆயிரம் ரிங்கிட்
கைச்செலவுக்கு வெச்சுக்கோ
இருபதுநாள்ல இங்கே வந்திடணும்
பரிவோடு முதலாளி
சொன்னபோது
கணேசனுக்கு
பொருமிக்கொண்டு
வந்தது அழுகை
கூட வேலை பாக்கும்
சிங்காரம் வந்து
கோலாலம்பூர்
ஏர்போட்டில் ஏத்திவிட
சென்னையில் இறங்கி
உடனே பஸ் பிடிச்சு
அதிகாலையில் சொந்த ஊரான
'உத்தங்குடி' வந்து சேர்ந்தான்
தட்டுமுன்னே
தானாய் திறந்தது கதவு!
தாப்பா போட்டு வெச்சிருந்த
ஆசைகளின் அணை திறந்து
முத்தமிட்டாள் மனைவி....
பத்து வருசத்துக்கு முன்னே
செத்துப்போன
அப்பா போட்டோவ
தொட்டு வணங்கினான்
இறந்தும் உதவுகிற
அப்பா இவர்தானோ!
முதலாளிக்கு போன்போட்டு
அரைகுறை ஆங்கிலத்தில்
அப்பா செத்ததாய்
முழுப்பொய் சொன்ன
அண்டை வீட்டுப்
புண்ணியவானுக்கு
நன்றி சொன்னான்
இரண்டு வருட பாசபாக்கியை
முத்தங்களால் இட்டுத்தீர்த்தான்
இருபதுநாள் கரைஞ்சது
கண்ணீ­ர் வழிய நின்ன
பொஞ்சாதியையும்
கையை பிடிச்சுக்கிட்டு அழுத
மகனையும்
புள்ளியாய் மறையும் தூரம் வரை
கை அசைத்துக்கொண்டே
விடைபெற்றான்
ஒரு வழியா
மீண்டும் ரப்பர் தோட்டத்திற்குள்
வந்து சேர்ந்தவனை
சக தொழிலாளிகளின்
துக்க விசாரிப்புகள்
சங்கடப்படுத்தின
மாதம் கடந்தது....
இரண்டாம் பிள்ளையை சுமக்கும்
செய்தியை இறக்கிவெச்சது
மனைவியின் கடிதாசி
இருபது நாள் விடுமுறைக்கு
இன்னொரு பரிசு
பூரிப்பா இருந்தாலும்
புதுக் கடன் ஒன்னு
புறப்பட்டாச்சு....
மூனு உசுருக்கா
உழைச்சவன்
நாளையிலிருந்து
நாலு பேருக்கு உழைக்கணுமோ
பாவம் கணேசன்
பால்மரங்களும் பரிதாபப்பட்டன!

எழுதியவர் : (18-Jan-14, 4:20 pm)
பார்வை : 40

மேலே