யாசகத் தாய்

தாயே !
உன் அரவணைப்பில்
அரண்மனைச் சுகம் காண்கிறேன்.

உன்
அக்குள் வியர்வையில்
அத்தரை முகர்கிறேன்.

மடியிருத்தி மார்தூக்கி
பாலூட்டும் போது
பால் புட்டி மழழையரை
பாவமென்று அறிகிறேன்

கவர்ச்சியிலே நீயும்
கவனம் செலுத்தியிருந்தால்
தளர்ச்சியுற்று
தரைக்குள்ளே போயிருப்பேன்.

பிச்சைக்காரி ஆனாலும்
கொச்சையாய்ப் பார்த்திருக்கும் ஆணுலகு.
ஆண்டிச் செல்வங்களை
அள்ளிக் கொடுத்திருப்பாய்.

உள்ளங்கை ஏந்தி-
உயிர் வளர்த்தாய்
எனை வளர்க்க.

நம் பரம்பரையின் ஜனனம்
பயணங்களில் தானா?

பிச்சையெடுக்கும் தாயே
பிச்சையிட்டாய் நீயும்
“கன்னித் தன்மையைக் கயவனுக்கு”

புகை வண்டி நிலையம்
பூட்டன் வீட்டுச் சொத்தா?

“அம்மா—தாயே”
இது
நீ பேசும் மழலையோ?

பிச்சைத் தொழிலுக்கு
நானும் ஓர் மூலதனமோ

தாய்மையற்றோர் ஏராளமிருக்க
தாராளம் நீ காட்டியது ஏன்?

உனக்காகவேனும்
மலடியாகி இருக்கலாமே!

கள்ளீப்பால் சூத்திரம்
கற்றதில்லையோ!

கிழிந்த சேலைக்குள்ளும்
ஒழிந்துகொள்ளும் பக்குவம் தந்தாய்.

காலண்டரும்
கடிகாரமுமின்றி
பொழுது கழிக்கும் புத்தி தந்தாய்

பசிக்காமலே
பாலூட்டினாய்.

போலிக் கண்ணிருக்கும்
கூலி கேட்கச் சொன்னாய்.

கை நீட்டுதலே
கருமம் என்றாய்.

கற்றுக் கொடுத்ததில்
விட்டுப் போனது
வெட்கப்படுவது

ஏன் தாயே ?
உனக்கும் அது தெரியாது என்பதாலா ?

எழுதியவர் : ராசைக் கவிபாலா (22-Jan-14, 6:47 pm)
சேர்த்தது : ராசைக் கவி பாலா
பார்வை : 95

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே