அப்படி என்ன கேவலம்

‘அரஞ்சேன்... அப்படியே.... என்னை என்னான்னு நினைச்சீங்க ? இல்லே தெரியாமத் தான் கேக்கறேன்.. இதே உங்க ஊர்லே ஒரு பொண்ணப் இப்படி பொது இடத்துல ஒட்டி உரசி நடப்பிங்களா ? ‘

திவ்யாவின் கேள்வி சரனை உண்மையில் செருப்பால் அடித்ததுப் போல் இருந்தது. அமைதியாகவே நின்றிருந்தான் அந்த பேருந்து நிலையத்தில். ஆம் அவள் கேட்பதில் என்ன தவறு ?

சரியாகத்தான் கேட்டிருக்கிறாள் என்பது அவள் கேள்வியின் கூர் முனை வார்த்தைகள் நெஞ்சை சாரமாரியாக தாக்கிய பின்புத்தான் புரிந்தது சரணுக்கு. இதே வேறு ஒரு ஆணாக இருந்திருந்தால் இந்நேரம் போடி என்றுக் சொல்லிப் போயே இருப்பான். ஆனால், சரண் அப்படிப்பட்டவன் அல்ல.

அவனுக்கு திட்டினாலும் கத்தினாலும் அவனது திவ்யா எப்போதுமே அவனக்கு தேவதை தான். சரணைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் பெரிதாய் சொல்ல நிறைய இருக்கிறது. மிகவும் திறமையானவன். சிரித்தால் கன்னத்தில் குழி விழும் கண்ணன். ஆள் பார்க்க கருப்புதான் இருந்தும் நல்ல திடமான உடல் மற்றும் கலையான முகம். அவன் தமிழ்நாட்டில் திருச்சியைச் சேர்ந்தவன். கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் வேலைக்காக மலேசியாவிற்கு அவன் அண்ணனோடு இங்கு வந்து சேர்ந்தான்.

பிரபல அச்சக கம்பனியில் கைநிறைய சம்பளத்தோடு நன்றாகவே வேலை செய்கிறான்.மது அருந்தும் பழக்கம் உள்ளவன். இருந்தும் திவ்யா வந்த பிறகு, மாவுக்கு மட்டுமே இனி அவன் வாழ்வில் இடம்; மதுவுக்கு அல்ல என்று ஒரு தீர்க்கமான முடிவை எடுத்துவிட்டான்.

பணியிடத்தில் தான் அவன் முதன் முதலாய் திவ்யாவைப் பார்த்தான். சிரித்த முகத்துடன் 'ஹாய்' என்றவளை இப்போதும் நினைத்து பார்த்து சில வேளைகளில் தனியே சிரித்துக் கொள்வதும் உண்டு. 'ஹாய்' யில் ஆரம்பித்து அடிக்கடி அலுவலகத்தில் பார்த்துப் பேசும் போதெல்லாம் கிண்டலும் கேலியுமாய் திவ்யா அவள் மற்ற தோழிகளுடன் சேர்ந்து சரணைக் கலாய்த்த காலமும் உண்டு. பெண்கள் புடை சூல வெட்கம் வந்தும் ஓடாமல் ஏதோ ஓரளவு சமாளித்து அவர்களிடமிருந்து தப்பித்து வந்த அனுபவப்பட்ட சம்பவங்களும் நிறைய.

அனைவரிடத்திலும் நட்புணர்வோடு பழகும் திவ்யா அவனை வெகுவாக கவர்ந்திருந்தாள். அதன் தாக்கமே அவனை அவளிடத்தில் தைரியமாய் அவளது கைத்தொலைப்பேசி என்னை கேட்க வைத்தது. கைதொலைபேசி கைமாறிய நேரத்தில் சரணின் இதயமும் இடமாறியது. ஆனால், அது சரணுக்கு மட்டுமே என்பது அவளுடன் பேசிப் பழகிய சில நாட்களில் அவனுக்கு தெரிய வந்தது. முதன் முதலாய் அவனுக்கு வலித்தது. அவனது கனத்த இதயம் அவனை கண் கலங்கவும் வைத்து விட்டது. காதல் என்ன சொல்லிவிட்டா வரும். அது பாட்டுக்கு வந்து விட்டது. ஆனால், அதன் பாடு இவன் அல்லவா அனுபவிக்க நேருகிறது என்ற ஆதங்கம் வேறு இவனை கொஞ்சம் ஆட்டியே விட்டது.

இருந்தும் மனம் தளரவில்லை சரண். பார்த்து பிடித்துப் போய் காதலில் விழுந்த சரணுக்கே நெஞ்சம் வலிக்கிறதென்றால் இரண்டாண்டு காதல் சும்மாவா. பாவம் திவ்யா. காதல் முறிவில் இருக்கும் திவ்யாவின் மனநிலையை எப்படியாவது ஆறுதல் படுத்த வேண்டும் ; அவள் மீண்டும் அதிலிருந்து தேறி வர என்ன செய்யலாம் என்ற யோசனையில் அவளை வெளியே அழைத்து போக நினைத்தான்.

ஆனால், இவன் அழைத்து அவள் வர வேண்டுமே. அங்குத்தானே சிக்கல். 'முயற்சி திருவினையாக்கும்'. 'முயற்சி செய்துப் பார் உலகமே உன் கை வசம்' போன்ற நல்ல நல்ல வாசகங்கள் மண்டையில் சுலன்றவாறே நம்பிக்கையோடு திவ்யாவிற்கு அவனுடன் வர சம்மதமா என்றான். அவளும் பச்சைக் கொடிக் காட்டினாள்.

இப்படி வெளியில் வந்த நேரம் பார்த்துதான் தவறுதலாய் அவள் கைப்பட்டையில் உரசியவாறே நடந்தப் போது கிடைத்தது அவனுக்கு இந்த பாட்டு. என்னப் பண்ணுவது தவறு அவனுடையதாயிற்றே. மன்னிப்புக் கேட்டாயிற்று. இனி அவனுடன் வெளியில் வர மாட்டாளோ என்று கொஞ்சம் பயந்தும் விட்டான் சரண். நல்ல வேளை அவனது மன்னிப்பு திவ்யாவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இப்படியே தொடந்த இவர்களது நட்பு பரிபூர்னமாகி ஒரு வருடமும் ஆகிப் போனது. இருவரும் நல்ல நண்பர்கள் ஆனார்கள். திவ்யாவிற்கு நல்ல இறை நம்பிக்கை. அதிகமாகவே கோவில்களில் தான் சரணை அவள் சந்திக்க விரும்புவாள். அவளுடன் சேர்ந்த நாளிலிருந்து தன்னுள் ஒரு புது புத்துணர்ச்சிக் குடிக் கொண்டுள்ளதைப் போல் உணர்ந்தான் சரண். எந்நேரம் முகத்தில் புது பொலிவுடனும், தனகிட்ட பணிகளை செவ்வென செய்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினான். 'எள் என்றாலே எண்ணை'யாய் வந்து நின்றான் திவ்யாவிடம். நட்பின் நெருக்கம் திவ்யாவின் மனதை சரணிடம் நெருங்க வைத்தது. அரசால் புரசலாய் அதை உணர்ந்துக் கொண்ட வேளையில் சரியான சமயம் ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருந்தான் சரண்.

'பழம் நழுவி பாலில் விழுந்தது'ப் போல ஒரு நாள் திவ்யாவே அவனை பத்துமலை கோவிலுக்கு அழைத்திருந்தாள். போனவனுக்கு காதில் சக்கரையைக் காய்ச்சி ஊற்றியதுப் போல இருந்தது. ஆம், திவ்யா அவனிடத்தில் கொஞ்சம் மனம் திறந்தாள். அவளது பேச்சில் புதுத் தேம்போன்று தெரிந்தது. வார்த்தைகள் ஒவ்வொன்றும் மிகத் தெளிவாக இருந்தது. அவள் மனம் இப்போது பால் மனம் கொண்ட பச்சிளங் குழந்தையாய் எந்த ஒரு பழைய நினைவுகளும் இல்லாமல் புதிதாய் இருந்தது. இதற்காகத்தானே காத்திருந்தான் சரண் இத்தனைக் காலமும்.

ஆனந்த வெள்ளத்தில் மிதந்தான். சிலக் காலம் சென்றப் பிறகு அவளை அணுகினாள் நிச்சயம் முழு மனதோடு சம்மதிப்பாள் என்று அவனுக்கு பச்சி அடித்தது.

இதற்கிடையில் திவ்யாவும் புதிய பணியிடத்திற்கு மாற்றலாகி புது வேலையில் அமர்ந்தாள். நெருங்கிய தோழி என்று இதுவரை யாரும் இல்லாததால் பழைய அலுவலக நண்பர்கள் யாரிடமும் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளாமலே இருந்து விட்டாள். சரணைத் தவிர.

அவனிடத்தில் அவள் அறியாமல் ஒரு வித பாசம் படர்வதை அவள் அறியாமல் அல்ல. இருந்தும் தற்போதைக்கு மீண்டும் எதிலும் விழ அவளுக்கு விருப்பமில்லை. அடிபட்ட மானாயிற்றே கொஞ்சம் விழிப்பாய் இருப்பதில் தவறில்லையே. அதுவும் சரண் மலேசியா நாட்டை சேர்ந்தவனும் அல்ல. தமிழ் நாட்டு பிரஜை. அதுவேறுக் கொஞ்சம் சிக்கல்.

நான்கைந்து மாதங்கள் வேகமாய் நகர்ந்தன. நெஞ்சில் உள்ள தன் ஆசையை அவளிடம் கொட்டித் தீர்க்க சந்தர்ப்பம் எப்போது கைக் கூடுமோ என்ற ஆவல் நாள் பட நாள் பட வேகமாய் அவனுள் துளிர்த்தது. ஒரு நாள் சமயம் பார்த்து வெண்ணை நிறைந்த பானையை கண்ணன் உடைத்ததுப் போல அவனும் தன் மனதில் உள்ளவற்றை அவளிடத்தில் உடைத்து விட்டான்.

கொஞ்சம் அசந்து விட்டாள் திவ்யா. சுதாகரித்துக் கொண்டு யோசிக்க நாட்கள் வேண்டுமென்றாள். அதன் பிறகும் அவர்களது நட்பு 'நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக' இருந்தது. திவ்யா நான்றாக சிந்திக்க ஆரம்பித்தாள்.

கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு தேடினாலும் சரணிடத்தில் குறையேதும் காண முடியாது குடிப்பழக்கத்தை தவிர. அதைக் கூட திவ்யாவின் நட்பால் அவன் விட்டு விட்டதை அவள் அறியாமல் இல்லை. இருந்தும் தீவிரமாய் யோசித்து நல்ல முடிவொன்று எடுப்பது அவளுக்கும் சரி அவனுக்கும் சரி நல்லது என அவளுக்கு தோன்றியது.

பழகிய வரை பண்பானவன்,கண்ணியமானவன், உண்மையானவன். பேச்சுக்கு கூட தவறாய் ஒரு வார்த்தையை அவளிடத்தில் விட்டதல்ல. அனைவரிடத்திலும் மரியாதையாய் நடந்துக் கொள்பவன். அவனது நண்பர்கள் என்று சொல்பவர்கள் அனைவரும் மலேசியாயர்களே. அவனது முதலாளி முதல் கொண்டு, அறிமுகம் படுத்தியவரை அவனைப் பற்றி சொல்ல எந்த ஒரு அவதூரும் இல்லை எனலாம்.

எல்லார் இடத்திலும் அதிகமான நல்லப் பெயரையே வாங்கி வைத்திருந்தான். வருமானதிக்கும் குறைப்பாடில்லை. இருந்தும் இதை எல்லாம் தாண்டி அவன் ஒரு மலேசியன் இல்லை. அது மட்டும் தான் பிரச்சனை. ஆனால், இதைக் காரணம் காட்டி ஒரு ஆளை, ஆளை என்பதை விட ஒரு மனிதனை புறக்கணிப்பது கொஞ்சமும் ஏற்றுக் கொள்ளப்படாதது.

'காதலுக்கு கண்ணில்லை' என்ற பின்பு ஜாதி மதம் பேதம் எல்லாம் ஏன் ? இப்படி சொல்லும் உலகம் ஏன் இதுப் போன்ற காதலர்களையும் திருமணங்களையும் ஆதரிக்க மறுக்கின்றன? உலக நீதிகளை மறுக்கின்றன ?

இதுதான் உலகின் நீதியா? இப்படியேத்தான் இருக்குமா? ஊர் என்னப் பேசும் உலகம் என்னப் பேசும் என்று ஒவ்வொரு நாளும் பயந்து பயந்து வாழ்வதுதான் வாழ்க்கையா ? அல்லது இவர்களை கண்டும் காணானதுப் போல நடிப்பதுதான் வாழ்க்கையா ? முடிவெடிக்க இயலாத நிலையில் 'இருத்தலைக் கொல்லி எறும்பாய்' தவித்தாள் திவ்யா.

இருந்தும், முடிவெடுத்தாக வேண்டிய சூல்நிலையில் இருகின்றப் போது அவளை மாத்திரம் கருத்தில் கொள்வது எப்படி நியாயமாகும். சரணையும் நினைத்துப் பார்க்க வேண்டுமே. தவறான முடிவு அவன் வாழ்வை மட்டுமல்ல, அவள் வாழ்வையும் சேர்த்தல்லவா அழித்து விடும் என்பதில் தெளிவாக இருந்தாள். பல யோசனைகளுக்குப் பிறகு சரணை கரம் பிடிப்பதில் உறுதியாய் முடிவெடுத்தாள். அதை அவனிடமும் சொல்லி விட்டாள். அக மகிழ்ந்தான் சரண்.

நாட்கள் வேகமாய் ஓடின. திவ்யாவின் வரவால் அவனது நடவடிக்கைகள் எல்லாம் இன்னும் மெருகேறின. இருந்தும் திவ்யாவைச் சார்ந்த ஒரு சிலர் இதைப் பெரிதுப் படுத்தியே பேசி வந்தனர். மலேசியாவில் ஆண்களே இல்லையா ? ஏன் போயும் போயும் ஊர்க்காரனை இஸ்தப்பட வேண்டும் என்று அவள் காதுப் படவே கூறி வந்தனர்.

சில வேளைகளில் இதுப் போன்ற கூற்று அவள் மனதை மிகவும் காயப்படுத்துவதும் உண்டு. அப்பொழுதெல்லாம் அவளுக்கு உறுதுணை, அந்த சாய் பாபா மட்டுமே. சரணிடம் கூட இது பற்றி அவள் சொல்லியதுக் கிடையாது. தேவையற்றதைச் சொல்லி அவனை வேதனையில் ஆழ்த்துவது வீண் வேலை என்பது அவள் கருத்து.

அவள் என்னச் சொன்னாலும் மறுப்பேதும் சொல்லாமல் அதன் படியே கேட்டு வந்தான் சரண். கார் வாங்க திட்டம் தீட்டி திவ்யாவின் பிறந்தாளன்று புதுரக 'மைவி' கார் ஒன்றை அவளுக்கு பரிசாக அளித்தான். அவனே மொத்த செலவையும் ஏற்றுக் கொண்டு அவளை தனியாக புது அடுக்குமாடி குடியிருப்பில் குடி வைத்தான். அவளுக்கு தேவையான அனைத்தும் சரணால் பூர்த்தி செய்யப்பட்டது.

திவ்யாவின் கழுத்தில் அவன் கையால் மூன்று முடிச்சி போட்டு மஞ்சள் காயாத அந்தத் தாலியுடன் அவள் உலா வருவதைப் பார்க்க அவனுக்கு ஆவல் அதிகமானது. அதுவும் திருமணம் செய்யாமல் ஒருப் பெண்ணோடு அங்கும் இங்கும் ஊர் சுற்றித் திரிவதும் நல்லதல்ல. அப்பிறம் கண்டவனும் கண்டதைப் பேசுவான். அதற்குள் அவனின் இதய ராணியை அந்த அழகியைக் சீக்கிரமாய் கட்டிக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தான்.

சரண் வீட்டில் அனைவருடனும் கைத்தொலைபேசியில் பேசி அனைவருக்கும் திவ்யாவை பிடித்திருப்பது அவர்கள் இருவருக்கும் சந்தோசத்தையே தந்தது. திவ்யாவும் காலம் தாழ்த்தாமல் அவள் வீட்டில் பேசி பெற்றோரின் சம்மதத்தை வாங்கி விட்டாள். இரு வீட்டாரும் சந்தித்து சுமுகமாகப் பேசி முதலில் இருவருக்கும் பதிவுத் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். பதிவுத் திருமணம் நடைபெறும் முன்பு தெரிந்தவர்களுக்கு விருந்து உபசரிப்பின் அட்டை வழங்க பழைய அலுவலகத்துக்கு சென்றாள் திவ்யா.

சிலர் வாழ்த்து தெரிவித்தனர். இன்னும் சிலர் முகம் சுளித்தனர். அதிலும் அவள் வயது ஒத்துடைய தோழிகள் திருமண விருந்து அட்டை வழங்க வந்திருப்பவள் என்றுக் கூட கொஞ்சமும் மரியாதை இன்றி சரணைப் பற்றி கொச்சமாக பேச ஆரம்பித்தனர்.

அப்படி என்னாடி பார்த்தா அவன் கிட்ட ? போயும் போயும் அவனா ? கதை முடிஞ்சிர்ச்சி தானே... ? அதானே கல்யாணம் ? ஏண்டி திவ்யா உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா ? அவன நம்பி மோசம் போகப் போறே நீ பாறேன் ! 'பெர்மிட்' முடிஞ்சி பணத்தெல்லாம் வாரிகிட்டு 'டாட்டா' காட்டிட்டு ஓட போறான் அப்புறம் தெரியும் ! அந்த சரண் என்னையும் 'லைன்' போடப் பார்த்தான். நான் செருப்பால அடிச்ச மாதிரி சொல்லிட்டேன் என்கிட்ட வாலாட்டன வாலே ஒட்ட நறுக்கிடுவேன் ஜாக்கரதன்னு ! ஊர்க்கார பக்கிக்கு மலேசியா பொண்ணு கேக்குதாம் ! நாமம் போட்டுட்டு உன்ன நாக்கு வழிக்க விட்டுட்டு போகப் போறது உறுதி ! என்னத்தக் காட்டி மயக்கனானோ... நீயும் கொஞ்சமும் இங்கிதம் தெரியாம போய் அவன் கிட்ட.... சி... சி...சி.... நெனச்சாலே கேவலாமா இருக்கு ! உவெக்...

என்ற இந்துவை வெறித்த பார்வையோடு மிகவும் ஆவேசமாக போதுண்டி நிறுத்துங்க ! இதுக்கு மேலையும் அவரப் பத்தி ஒரு வார்த்த தப்பா பேசனீங்க மரியாதை கேட்டிடும் ! பொண்ணுங்களா நீங்களாம் ? சீ ! மரியாதைதான் தெரியாது மனசாட்சியுமாக் கிடையாது ! எப்படிடி உங்களால மட்டும் இப்படி நாக் கூசாம ஒருத்தர்க் கூட பழகாம அவரப் பத்தி இப்படி பேச தோணுது ?! ஆமா, நல்லப் பலகற தேவி அக்காவையே நீங்க இப்படித்தான் பேசறீங்க ! சரண் எந்த மூல...?!

எங்க கல்யாணம் கண்டிப்பா நடக்கும். விருப்பம் இருந்தா விருந்துக்கு வாங்க. இல்லாட்டி வராதிங்க. முடிஞ்சது ! அவ்வளவுதான் ! இதுக்கு ஏன் இப்படி கண்டதையும் பேசணும்? அந்த மனுஷன் உங்களைப் என்னாப் பண்ணாரு ? அவரப் பத்தி உங்களுக்கு என்னாத் தெரியும் ? அப்படி என்னாக் கேவலம்? அவரு தமிழ் நாட்டுக்காரரு. அவ்ளோதான். அதுதான் ! அதுதான் இப்போ பிரச்சனை அப்படித்தானே ?! நம்ப நாட்டு பையனுக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம் ? ஒன்னும் கிடையாது நம்ப நாடு இல்லே உலகத்திலே எல்லாம் ஆணும் ஒன்னுதான். மதமும் தோல் கலருந்தான் மத்தபடி ஒன்னும் கிடையாது பெருசா.

இன்னொரு முக்கியமான விஷயம் அவர் என்கிட்ட பணத்தை சுரண்டல. என் மேலே தெரியாமக் கூட அவர் கை பட்டது இல்லே. நான் வேலைக்கு போகலே. படிக்கறேன் அவர் செலவுல. ஒரு கண்ணியமான ஆம்பள எப்படி தன் மனைவிய நடத்துவானோ அப்படித்தான் அவர் நடத்தறாரு என்னை.

மறந்துடாதீங்க அவரும் மனுஷன்தான். அவருக்குள்ளையும் இதே சிகப்பு ரத்தம் தான் ஓடுது.... ஒரு மனுஷனை பத்தி நல்லா தெரிஞ்சி பேசுங்க... இல்லாட்டி பேசாதிங்க... இனியாச்சம் திருந்துங்க....

என்று சொல்லிவிட்டு விருட்டென அப்பகுதியிலிருந்து வெளியேறி படியில் தடுக்கியவளைக் கைத்தாங்கலாய் பிடித்தான் சரண். அவளது கலங்கியக் கண்களின் மேல் முத்தம் ஒன்றை வைத்து அவளை அழைத்து சென்றான். திவ்யா அவன் மீதுக் கொண்ட அன்பை எண்ணி திளைத்த வண்ணம் காரை ஓட்டினான்.அவளும் அவன் தோளில் வசதியாய் சாய்ந்துக் கொண்டாள்.

எழுதியவர் : தீப்சந்தினி (23-Jan-14, 12:02 pm)
பார்வை : 259

மேலே