இங்க என்ன சொல்லுது
உரிமைக்காய் உயரட்டும் இரு கைகள்- நாம்
ஒருபானையில் வெந்த பருக்கைகள்.
ஆண்டாண்டு காலமாய் அடிமைகள் -எனும்
ஆதிக்கச் சுவற்றை இடியுங்கள்.
நாடானது கேடானது பாருங்கள் - அட
ஜனநாயகம் பினமாகுமுன் வாருங்கள்!
ஆண்டவன் போதுமடா போகட்டும்! - நாளை
ஆண்டியும் உலகையே ஆளட்டும்!
அடியாத்தி இதுஎன்ன புதுகூத்து -பாரு
வெலவாசி நெலாவுக்கே போயாச்சு!
எல்லார்க்கும் பொதுவென்றே எண்ணோனும் - இங்கே
ஏதப்பா ஆளாளுக்(கு) ஒருவானம்!
சந்திரன 'வேவு'பாத்தான் ஆளைவிட்டு - அந்த
ஆம்ஸ்ட்ராங் இப்பஇல்ல 'ஆள்-அவுட்டு!'
இப்போதே எழுதிவிடு வரலாறு - ஆண்டு
எட்டுவது கடினம்தான் ஒருநூறு!
காத்திருந்தால் வாராது பொற்காலம் - நீ
உருவாக்கு இன்றே உன் எதிர்காலம்.
புதிருக்கு பதில்சொல்லும் புத்திநீயடா - எந்த
பூட்டையும் திறக்கின்ற சாவி நீயடா!
இளசெல்லாம் வரவேண்டும் மரபைச்சொல்ல - நீ
பழசெல்லாம் மறந்திட்டா பண்பாடில்ல!
தடையில்லா மின்சாரம் வருமாயிங்கே!-போயி
பொழப்பப்பார்! 'புரொட்டாக்கு குருமாஎங்கே?'
அஞ்சாண்டுக்(கு) ஒருவாட்டி 'மை'யவச்சான்- நாட்ட
கரண்ட் இல்லா காடாக மாத்திப்புட்டான்
உன்சொல்லு சரியாக படலங்க - அது
கல்கட்டி காய்க்காத புடலங்கா!
அங்கிங்கும் விளையாண்ட பயபுள்ள - இப்போ
'டெங்கு'குக்கு பலியாச்சே என்சொல்ல?
'....சு!' வந்தா 'அப்பல்லோ' போறானே!-இவன்
கொசு இல்லா சுகாதாரம் தந்தானா?
டெல்லிய சுத்தம்பண்ணும் 'வாரியலு' - வந்தா
தமிழ்நாடும் காணுமடா விடியலு!
அழுகின்ற குழந்தைக்கு பாலில்ல - அட
ஏனென்றால் அம்மாக்குச் சோறில்ல!
இதுபோன்ற அவலங்கள் வேரில்ல -ஆமாம்
இவைதீர்க்க அரசுக்கு கூறில்ல!
மாற்றம்தான் மாறாதது உணரப்பா-அட
உன்வாழ்க்கை உன்கையில் தானப்பா!
நீயே செய்!நானெதுக்கு!நிறுத்துங்கள்-ஒன்றாய்
ஊர்கூடித் தேரிழுப்போம் வாருங்கள்!