அறிவு வளாகம்

இங்கே எழுத்தறிவிக்கப்படுகிறது தங்குதடையில்லாமல்,
எல்லாம்வல்ல வித்தக அறிவாளர்கள் வாக்கினில்,
அன்புதரவும் பொருள்தரவும் அங்கங்கே ஆட்களுண்டு,
அறிவுதர உள்ளனரா ஆளுமையாய் அவனியிலே?

மணலில் துவங்கியது மாசற்ற எழுத்துப்பணி,
வளர்ந்து மேலோங்க வந்தன ஆணியும் சுவடியும்,
தொடர்ச்சியாய் கண்டுனரப்பட்டன காகிதங்கள்,
அதுதொடர்ந்து வந்தது தட்டச்சும் கணினியும் !

அறிவை கிரகித்தவன் எழுப்பினான் கேள்விகளை,
தொடர்ந்த செயல்பாட்டில் ஆக்கினான் வேள்விகளை,
துச்சமாய் எண்ணியே தட்டிவிட்டான் தோல்விகளை,
கட்டுப்பாட்டில் மாய்ந்து சிறப்பித்தான் வாழ்வியலை !

துணைக்கும் இணைக்கும் சந்தேகத்தில் தயங்கியவன்,
தனக்கான ஆசானை கண்டு கனவு கோர்த்தான்,
கணிக்கமுடியாமல் கலைந்துபோன சமயமதில்,
கடந்து ஊர்ந்து கவனித்து பொறுமை சேர்த்தான் !

கல்விமுறை சிறப்பாயினும் தன்னகத்தே உலவினான்,
அடர்ந்த உலகுக்குள் தனித்து வெடித்து மருகினான்,
பொதியாய் புத்தகங்கள் சுமந்து தள்ளாடி பழகினான்,
கொழுத்த அறிவினர்முன் கொள்கையுடன் உருகினான் !

தானே வியூகங்கள் அமைத்து விழி தொடங்கினான்,
உள்ளே தணல்மூட்டி யூகங்களில் மயங்கினான்,
பணியை செவ்வனவே செய்தபடி அடங்கினான்,
நினைத்த சூத்திரத்தை முடித்ததும்தான் உறங்கினான் !

என்னே வளர்ச்சியடா அறிவடர்ந்த தேசத்தில்,
என்றாலும் சிலபங்கு போகின்றன நாசத்தில்,
இருக்கப்பார் என்றும் நீ ஆசிரியர் வாசத்தில்,
அறிவின் அரண் அவர்கள் உணர்ந்திடுவாய் சுவாசத்தில் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (15-Feb-14, 7:59 pm)
பார்வை : 73

சிறந்த கவிதைகள்

மேலே