மருந்து வாங்கப் போயிருக்கிறான்

தவிக்கிறேன் நான்...
தேற்றுகிறான் அவன்!

நோய் வந்தால் அவதிப்படும்
குழந்தைப்போல-
வலியினில் புரண்டு...
வேதனையில் துவண்டு...
தவிக்கிறேன் நான்!

அருகினிலே அமர்ந்திருந்து
தந்தையைப் போல-
முத்தஞ் செய்து
முதுகெல்லாம் தடவி
தேற்றுகிறான் அவன்!

நான் தூங்குகிற போது
விழித்திருக்கிறான்...
விழித்திருக்கும் போது
சிரித்திருக்கிறான்!

சுகமான சிலநேரம்
சில்லென்று நான் சிரிக்க-
சிலிர்க்கின்றான் அவன்!

அங்குமிங்கும் ஓடியாடி
ஆனந்தமாய் நான் திரிய-
சிட்சிக்கிறான் அவன்!

வேதனைகள் சூழும் நேரமெல்லாம்
வைத்தியனை வருவிக்கின்றான்!
வலியினின்று மீளும் நேரங்களில்
பொம்மைகள் தருகின்றான்!

சிரித்தால் சிட்சிக்கிறான்...
அழுதால் தேற்றுகிறான்...

அமைதியாகப் புன்னகைக்கும்
நேரங்களில்
அருகிருந்து
புளகாங்கிதம் அடைகிறான்!

இனிப்புகளையும்
இன்பங்களையும்
அளவோடு தருகின்றான்!

கசப்புக்களையும்
துன்பங்களையும்
மருந்துக்காய் தருகின்றான்!

வலியினில் புரண்டு
வேதனையில் துவண்டு
தவிக்கிறேன் நான்-
குழந்தையைப் போல!

அருகினிலே இருந்து
அங்கமெல்லாம் தடவி
தேற்றுகிறான் அவன்-
தந்தையைப் போல!

அருகினிலே அவனிருந்தும்
பயப்படுகிறேன் நான்!

கண்விழிக்கும் போது-

அவனைக் காணவில்லை -
அதிகம் பயப்படுகிறேன்...

மருந்து வாங்கப் போயிருக்கிறான் -
இறைவன்!

எழுதியவர் : மனோ & மனோ (24-Feb-14, 6:47 pm)
சேர்த்தது : கிறிஸ்டல் மனோவா
பார்வை : 90

மேலே