செல்வாய் சொல்வாய்
வெண்மேகமே விரைந்தே செல்வாய்
வெண்புறாவின் நிலையைச் சொல்வாய்
விண்ணில் இருக்கும் மன்னவனுக்கு
விருப்பொடுசேதி விடுத்தே செல்வாய் .....!!
நீலமேகமே நடந்தே செல்வாய்
நினைவில் உன்னையே சுமப்பவள்
நீவிட்டுப்போன கடமை முடித்து
நிருமலமாய் வருவாளெனச் சொல்வாய் ...!!
பொன்மேகமே பொங்கியே செல்வாய்
பொழுதுகள் நகர்வது நரகேயாயினும்
பொய்த்தலில்லா துணையும் வரும்வரை
பொறுமைகாப்பாய் என்றே சொல்வாய் ....!!
செம்மேகமே சடுதியில் செல்வாய்
சிரமங்கள் வதைத்தாலும் தடுமாறாமல்
சிரமேல் பொறுப்பு சுமந்து
செவ்வனே முடிப்பாளென சொல்வாய் ...!!
கார்மேகமே கரையாமல் செல்வாய்
கவலையுற்றாலும் கண்ணீர் மறைத்து
காதலாள் வாடா மலராய்
கணவனுனைச் சேர்வாளெனச் சொல்வாய் ....!!
வான்மேகமே வரிந்துகட்டிச் செல்வாய்
வாழ்ந்தது போதுமென உளம்நினைத்தாலும்
விதியது முடிந்த பின்
விடைபெற்றுனை அடைவாளெனச் சொல்வாய் !!!