அக்கா என் பிறப்பு
கண்ட முதல் நாள் தெரியவில்லை
கதை பேசிய முதல் நாள் தெரியவில்லை
உறவாடிய முதல் நாள் தெரியவில்லை
உலகை கண்களால் உணர்ந்து என்று கண்டேனோ
அன்றிருந்து என்னோடு எனக்காய் இருக்கிறாய்..!
நீ யார் என்பதை அறிய வயது அன்று இல்லை
உன்னை யாரென்று அழைப்பேன்
என்ற பெயர் அன்று புலப்படவில்லை..!
எனை விட சற்று உயரமாய்
குட்டை பாவடையில் என்னை 'குட்டி தம்பி ' என
நீ அழைத்து அணைத்துக் கொஞ்சிய சிறு சிறு நினைவுகள்,
உன் நேசமும் வாசமும் நன்றாய் புரிந்தது
எனக்கு நலமாய் கூட இனித்தது..
காரணமின்றி தாயை நேசிப்பதாய்
கண்ட நாளில் இருந்து
உன்னையும் நேசித்திருக்கிறேன்..!
சுற்றம் சொல்லியே இவ்வுறவின் பெயர் தெரிந்தது
உறவு முகவரி அறியாத நாளிலேயே
உன்னை உணர முடிந்தது
இது 'அக்கா' என பெயரிட்டதால்
வந்ததல்ல..
அன்பெனும் உன்னதம் கருவிலேயே
நமை இணைத்ததால் ஆனது !
நாட்கள் கழிய நாம் சேர்ந்தே வளர்ந்தோம்
நமக்கே நமக்காய் செல்ல நினைவுகள் சேர்த்தோம்
சேர்ந்து ஓட்டிய 'ladybird ' மிதிவண்டி
செல்லமாய் கிழித்து கொண்ட தலையணை சண்டைகள்
சகட்டுமேனிக்கு கிறுக்கி பதித்த வண்ண சித்திரங்கள்
உலகம் மறந்து ஊர் சுற்றிய இன்ப சுற்றுலாக்கள்
காத்து ஏங்கிய முழு ஆண்டு விடுமுறைகள்
படித்து பார்த்து வளர்ந்த உன் பள்ளி புத்தகங்கள்
எத்தனை நினைவுகள்
அதனுள்ளே
எத்தனைக் கனவுகள் ..!
வயது கடந்தோம்
வண்ணங்கள் மறைந்தது
வாழ்வின் வளைவுகள்
சற்று வாட்டி பிரித்தது
சமூகம் கொஞ்சம் மூட்டி விட்டது
காரணமின்றி பிறந்த நேசம் போல
காரணமில்லாத இடைவெளியும் பிறந்தது !
இடைவெளியில் தான் நம் இளமையும் வந்தது
உன்னை சார்ந்த உன் பிரச்சனைகளும்
என்னை சார்ந்த என் பிரச்சனைகளும்
நம்மை சார்ந்த நம் நேசத்தினை சற்று
சிதைக்க தான் செய்தது !
தனியாய் எத்தனையோ அழுகை
தவறாய் எத்தனையோ செய்கை
அத்தனையும் கடந்து
ஆன்ம தெம்போடு நீ அன்றும் நின்றாய்
இன்றும் நிற்கிறாய் ..
என்னை கொன்று தின்ற என் இளமை காலம்
வலி தாங்கா பிள்ளை
அம்மா என்று வருவது போல
அக்கா என்று உன்னை நோக்கி தான் தள்ளியது ..
குழந்தையாய்
தள்ளாடி நடை பழகிய போதெல்லாம்
அன்றும் என் கை பிடித்தவள் நீ தான்
இன்றும் கூட நீ தான் ..!
என்றும் முதலாய் நீ மட்டும் தான் !
ஆயிரம் பெண்ணை அம்மா என்றழைப்பினும்
பெற்றவளை பிள்ளை அழைக்கும் 'அம்மா ' வில் தான்
உன்னதமும் உயிரும் இருக்கும்
உன்னை அக்கா என்று எண்ணும் போது கூட
அப்படித் தான் ..!!