+தாய்க்கும் வேண்டும் ஒரு தாலாட்டு+
உச்சி வெயிலிலே
குச்சி பொறுக்கியது அன்றைக்கு
மச்சி வீட்டிலே நீ
குச்சி குடிலிலே நான் இன்றைக்கு
என் வயத்த காயப்போட்டு
உன் வயத்த நிரப்பியது அன்றைக்கு
வத்திப்போச்சு என் வயிறு
வத்திப்போச்சு உன் பாசம் இன்றைக்கு
நீ சிரிக்க நான் சிரிச்சேன்
நீ அழுக நான் தவிச்சேன் அன்றைக்கு
என் கண்ணீர் காலியாச்சு
உன் மனசு போலியாச்சு இன்றைக்கு
அழகான உடைபோட்டு
தெனம் மனதால் ரசிச்சேன் உனை அன்றைக்கு
கந்தலான சேலை கூட
இரக்கம் காட்ட மறுக்கிறதே இன்றைக்கு
உன் பேச்சு கேட்டுவிட்டால்
சாப்பிட மறந்து கேட்டிருப்பேன் அன்றைக்கு
நான் பேச வாய்தெறந்தா
அதட்டி எனை அடக்குறியே இன்றைக்கு
என்கூட நீ பேசவேணாம்
என்பேச்சக்கூட கேக்க வேணாம்
தெம்பிருந்தா உழைச்சிருப்பேன்
உன்னைவிட்டே போயிருப்பேன்
நடக்கக்கூட சக்தியில்ல
கடவுளுக்கோ புத்தியில்ல
எனக்கு வயச ஏற வச்ச அவன்
உனக்கு பாசம் மறக்க வச்சுட்டானே
அவனச் சொல்லி குத்தமில்ல
புலம்பல் எனக்கு புதுசுமில்ல
இருக்கும் வரை மறக்கமாட்டேன்
அந்தக்கால உந்தன் முகம்....