இசையாய் இணைந்திட்டாய்

விழி இருந்தும்,
வழி தெரியாததால் மனம்
வலி தாங்காமல் கதறிடும்
ஒலி கேட்டு கண்ணா நீ
ஒளியாகவாவது என் முன் தோன்றிடுவாயா?

உனக்காக காத்திருக்கும் மாலைப் பொழுதுகளில்,
எனக்காக தேன் சிந்துகின்றது அடிவானம்.
ஊடலும் கூடலுமாய் வெண்முகில்களின் சல்லாபம்,
உனக்கான என் காத்திருப்பை மேலும் தகிக்க வைக்கின்றது..

விண்வெளியில் வியாபித்திருக்கும் நிலவின் ஒளியில்,
மின்னல் கீற்றுகளாய் உரசிச் செல்லும் உன் நினைவுகள்,
என்னைத் தீயாய் எரித்து சாம்பலாக்குமுன்,
கண் இமைக்கும் நொடிகளிலாவது காட்சியளித்துவிடு...

விட்டகலா நினைவுகள் விண்ணைமுட்டும் அளவிற்கு,
சுட்டாலும் விலக மறுக்கும் உன்மேலான பிரேமை,
மட்டுப்படாத ஏக்கங்களின் போர்வையை நீக்கி,
விட்டுவிட்டு துடிக்கும் இதயத்தின் ஓசைதனை சீராக்கிவிடு.

கனவுகளின் நினைவுகளில் மன்றாடிக் கொண்டிருக்கும்
என்னாசையின் சிதறல்களை உனக்காக சேகரிக்கின்றேன்.
காற்றாக வந்துவிடு.. கருத்தினில் நுழைந்து விடு...
நட்டாற்றில் மூழ்கிடுமுன் நாழிகையில் வந்துவிடு..

***********------------------**************---------------**********

பெ.மகேஸ்வரி

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (4-Mar-14, 7:38 am)
பார்வை : 87

மேலே