கண் எனும் காட்டாறு

கரும்பு நெஞ்சுக்காரி
கட்டெறும்புக் கண்கள்
அரும்பிப் புன்னகை பூத்து
வெண்ணெய்க்குள் வாளாய்
வெல்லத்தில் தேனாய்
நுழைந்து திளைக்க
குறும்பு வாலிபர்களைக்
கூட்டங்கூட்டமாய்
விசேட வசியம் செய்து
விரும்பி விளிக்கின்றன.....
கருணையின்றிக்
கட்டாறாய்
கரையிலிருப்பவர்களையும்
கல் நெஞ்சங்கொண்டு
கவ்விப்பிடித்து
கவர்ந்திழுக்கின்றன.....
கபட நாடகக்
கண்கள் விட்ட
கணைகள் பட்டு
கோமகன் முதல்
கோவலன் வரை
கலையாதவன் யாருமில்லை
மனக் கதவு திறவாதவன்
ஆண் மகனுமில்லை....
ஒரு நிமிடத்தில்
ஓராயிரம் கதைகள்
ஒதுங்கி நின்று
ஒப்பித்து விடுகின்றன
தன்னிடம்
தகர்ந்து போகும்
தவங்களிடம்....
தாக்கும் வேகத்தில்
தகர்க்கும் பாவத்தில்....
அக்னியும்
அணுசக்தி ஏவுகணையும்
இவள் கண் முன்
தினம் தோற்றுத்
திரும்பிப்போகின்றன....
எழுந்து நின்று
எழுதுவதற்குள்
மறுபடியும்
மருளும்
மலர்க்கணைகளினால்
மசைக்கைக்காரி போல்
மயங்க வைக்கின்றன
மனம் கிறங்க வைக்கின்றன....