ரங்கநாதன் கவிதைகள் மச்சினிக்குப் பிறந்த நாள்
வேகாத வெய்யிலிலே
வெள்ளாடு மேய்ச்ச பணம்
பல்லாடும் பனிக்குளிரில் புள்ளாண்டம்
பால் கறந்து சேர்த்த பணம் புள்ளாண்டம்
கூவி நான் கோழி வித்தேன்
கொத்தவரைக் காய வித்தேன்
வெத்துடம்பில் சந்தையிலே புள்ளாண்டம்
வெள்ளரிக்கா வித்த பணம் புள்ளாண்டம்
மாடா உழைப்பு உழைச்சேன்
மகன் படிக்க செலவழிச்சேன்
வேலை கெடக்கலன்னு புள்ளாண்டம்
வெட்டுக்கடா பூசை வச்சேன் புள்ளாண்டம்
சீமையிலே சேவகமாம்
சர்க்காரு வாகனமாம்
சம்பளம்தான் ஆனவுடன் புள்ளாண்டம்
சொந்த மண்ணு கசக்குதடா புள்ளாண்டம்
காடு விளைச்சலில்லே
கால்நடைக்குத் தீனி இல்லே
கட்டுலோட கெடக்கறேன்னு புள்ளாண்டம்
கடுதாசி அனுப்பி வச்சே புள்ளாண்டம்
மச்சினிக்குப் போறந்த நாளாம்
மகன் போயி வாழ்த்தனுமாம்
கூட்டம் சிரிக்குதடா புள்ளாண்டம்-எனக்கு
கொள்ளி வைக்க புள்ளே வல்லே புள்ளாண்டம்