வாழ வச்ச தெய்வம்

“ரொம்ப நெஞ்சழுத்தக்காரி ...! ஏதாவது வாயத் திறந்து சொல்றாளா பாரேன் ! வர்ற ஆத்திரத்துக்கு .....” பற்களை நறநறவென கடித்தாள் விசாலம் .
“ எல்லாம் நீ குடுக்கிற இடம்தாண்டா ! “
“ எல்லாரும் கேக்குறாங்கல்ல ! சொல்லு வைதேகி ...! ஆறு மாசமா திண்டிவனத்துல உங்க அம்மா வீட்டுக்கு போறதாதானே சொல்லிட்டுப்
போனியாம் ? அங்க வரவே இல்லன்னு உங்கப்பா சொல்றாரு ! அப்ப எங்கடீ போனே ? “ ராமு கத்தினான்.
“இந்த விஷயம் என்ன கட்டிக்கப் போறவருக்கு தெரிஞ்சா இந்தக் கல்யாணம் நடந்தா மாதிரிதான் !” சுந்தரி முகத்தை ஒரு வெட்டு வெட்டினாள்.
கூடத்தின் ஓரமாய் சுருண்டுக் கிடந்த வைதேகி வாயைத் திறக்கவே இல்லை .அழுது அழுது கண்கள் சிவந்து முகம் வீங்கி இருந்தது .
ராமுவுடன் அவன் அம்மா விசாலம் ,தங்கை சுந்தரி மூவரும் கூட்டணி
அமைத்துக் கொண்டு வைதேகி மேல் வார்த்தை அம்புகளை சரமாரியாய் தொடுத்தனர் .
எல்லோருக்கும் வைதேகியின் பதில் கண்ணீர்தான் !
காலிங் பெல் ஒலித்தது .ராமு போய் கதவைத் திறந்தான் .
“யார் நீங்க ? உங்களுக்கு யார் வேணும் ?”
“என் பேரு லலிதா ! நான் நர்சா வேல பாக்குறேன் ...வைதேகியப் பாக்க வந்தேன் !”
உள்ளே வந்தவள் வைதேகியைப் பார்த்து அதிர்ந்து போனாள் !
“வைதேகி ! என்னம்மா ...உன் முகமெல்லாம் வீங்கியிருக்கு ?என் இப்படி அழறே ? “
விசாலத்துக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது !
“ஏய் யாரம்மா நீ ! அவளுக்கு வக்காலத்து வாங்க வந்துட்ட ?அவ என்னடான்னா கடப்பாரைய முழுங்குனா மாதிரி வாயையே தொறக்க
மாட்டேங்குறா...? “
நடந்ததை ஒருவாறு ஊகித்தாள் லலிதா .
லலிதா வைதேகியின் கண்ணீரைத் துடைத்து “ நீ ஏம்மா பேசாம இப்படி
சித்ரவத அனுபவிச்சிட்டிருக்க ...? உண்மைய உன் புருஷன் கிட்ட சொல்லிடு
பச்ச உடம்புக்காரி .....இப்படியே அழுதிட்டிருந்தா ஜன்னி வந்திடும் ...! “
“ என்னது.... பச்ச உடம்புக்காரியா ? ரெண்டு வருஷமா என் புள்ள ஊர்லயே இல்ல ... இது எப்படி ..? கண்களை உருட்டினாள் விசாலம் !
தரையில் கையை ஊன்றி மெல்ல எழுந்து ராமுவின் காலில் விழுந்தாள் வைதேகி ! அவள் நினைவுகள் ஒரு நொடிப் பொழுதில்
பின்னோக்கிச் சென்றது ........
கலங்கிய கண்களுடன் கோயில் தூணில் சாய்ந்து அமர்ந்திருந்த வைதேகியைப் பார்த்த லலிதா ....ஹாய் நீங்க வைதேகி தானே ?
ஆமாம் ! நீங்க .... நர்ஸ் லலிதா தானே ...? ஆமாம் !
“ஏன் கண்ணெல்லாம் கலங்கியிருக்கு வைதேகி ?”
“மனசே சரியில்ல சிஸ்டர் ! கல்யாணம் ஆயி பதினஞ்சு வருஷம் ஆச்சு ...கொழந்த இல்ல ... எங்க வீட்டுக்கார் துபாயில எலக்ட்ரீஷியன் வேல
பாக்குராரு...! அவர் தங்கச்சி சுந்தரிய பொண்ணு பாக்க வந்தாங்க ...அவ கால் சாய்ச்சிதான் நடப்பா ... அவங்களுக்கு பொண்ணு புடிச்சிருந்தது ...ஆனா
நாப்பது பவுன் நகையும் ஒரு லட்சம் ரொக்கமும் வேணுமாம் ! அவ்ளோ பணத்துக்கு எங்க போறது ? என் நகை இருந்ததெல்லாம் வித்துதான் அவரு
துபாய் போனாரு...!எங்க மாமியாருக்கு நல்ல சம்பந்தம் கைவிட்டு போயிடுமோன்னு கவலை ...அழுதிட்டிருக்காங்க ....எங்க வீட்டுக்காரரால
அவ்ளோ பணம் புரட்ட முடியாது ! என்னால ஒண்ணும் பண்ண முடியலயேன்னு தான் மாரியாத்தாகிட்ட மடிப்பிச்சை கேட்டு அழுதேன் சிஸ்டர்... !”
“கவலப்படாதே ..வைதேகி ! மாரியாத்தா உன்ன கைவிடமாட்டா ...!கண்டிப்பா ஒரு நல்ல வழி காட்டுவா ...!! இன்னிக்கு எங்க ஹாஸ்பிடலுக்கு ஒரு ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் வந்தாங்க ..பெரிய கோடீஸ்வரங்க...! அவங்களுக்கு கல்யாணம் ஆன மூணு வருஷத்துலயே ஒரு ஆக்ஸிடெண்ட்ல அந்த லேடியோட யூட்ரெஸ் ரிமூவ் பண்ண வேண்டியதாப் போச்சாம் ! ஆனா அவங்க குழந்த வேணும்னு ஒரே வெறியா இருக்காங்க !
அவங்க டாக்டரம்மா கிட்ட வாடகைத்தாய் மூலமா குழந்தை பெத்துக்கறதப்
பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டிருந்தாங்க ...இம்மீடியட்டா ஒரு நல்ல பெண் வாடகைதாயா கெடைப்பாளான்னு கேட்டுட்டிருந்தாங்க ...எத்தனை லட்சம்
செலவானாலும் பரவாயில்லைனு சொன்னாங்க ....!”
“உனக்கு ஓ கேன்னா நாளைக்கு டாக்டர் வீட்டுக்குவா ...!”
நாள்முழுதும் யோசித்த வைதேகி காலையில் மருத்துவமனை சென்றாள் .
“வா வைதேகி ! டாக்டரம்மா கிட்ட பேசலாம் !”
“அம்மா இவங்க பேரு வைதேகி ! எனக்கு தெரிஞ்சவங்க ...வாடகைத்தாய்
கேட்டீங்களே ...அதான் இவங்கள வரச் சொன்னேன்மா !” எல்லா விஷயமும் சொல்லிட்டேன் ...குடும்ப சூழ்நிலையால இதுக்கு சம்மதிக்கிறாங்க ...!”
“ஏம்மா வைதேகி முழுமனசா சம்மதமா ...? ஆனா ஏழு மாசத்திலருந்து எங்க கண்காணிப்புலதான் இருக்கணும் ! உனக்கு யாரோட கருவ சுமக்கப் போறோம்னு தெரியாது. அவங்களுக்கும் நீதான் வாடகைத்தாய்ன்னு தெரியாது ...குழந்தை பிறந்தவுடனே அவங்க கிட்டதான் கொடுப்போம் ...உன் கண்லகூட காட்ட மாட்டோம் ...உனக்கு அஞ்சு லட்சம் கொடுப்போம் ...
உங்க வீட்டுல கேட்டுட்டு சம்மதம்ன்னா சொல்லு ...!”
“மேடம் ! எங்க வீட்டுக்குத் தெரிய வேணாங்க ....இந்த பணம் முதல்லயே
கெடைச்சா எங்க குடும்பத்துக்கு ரொம்ப உபயோகமாயிருக்கும் மேடம் ...!”
“இரும்மா ! முதல்ல நீ வாடகைதாயா இருக்க ஃபிட்டா இருக்கியான்னு பாத்துட்டு மேற்கொண்டு பேசலாம் ...!நாளைக்கு வா. நான் அவங்க கிட்ட கலந்து பேசிட்டு சொல்றேன் ...!!
மறுநாள் .
“வைதேகி ! அவங்க சரி சொல்லிட்டாங்க ...உன் கர்ப்பப்பையும் நல்லா இருக்கு ! கரு உருவான ரெண்டு மாசத்தில மூணு லட்சம் தருவாங்க !
மீதி குழந்தை பிறந்தஉடனே தருவாங்க ...!”
“சரிங்கம்மா ரொம்ப நன்றி ! வயிறு பெருசானா வீட்டுல காட்டி கொடுத்திடுமே ...அப்ப நீ லலிதா கூட இங்கயே தங்கிக்கலாம் ...!”
திட்டமிட்டபடியே எல்லாம் நடக்க மூன்றாவது மாதம் கைக்கு வந்த மூன்று லட்ச ரூபாயை வைதேகி தன் கணவன் பெயரில் மாமியாருக்கு அனுப்பி வைத்தாள் . வீடெங்கும் சந்தோஷ அலை வீசியது .வைதேகிக்கு தப்பு செய்துவிட்டோமோ என்ற குறுகுறுப்பு இருந்தாலும் சுந்தரியின் சிரிப்பில்
தன்னை மறந்தாள் .நான்கு மாதங்கள் எப்படியோ சமாளித்து விட்டாள் .இதற்குமேல் இங்கிருந்தால் விஷயம் விபரீதமாகிவிடும் என்றுணர்ந்தவள் ....தன் அப்பா கடிதம் எழுதுவது போல் தன் மாமியாருக்கு கடிதம் எழுதினாள். அதில் வைதேகியின் அம்மாவுக்கு கீழே விழுந்து கால் ஒடிந்து விட்டது என்றும் உதவிக்கு வந்து நான்கு மாதங்கள் கூட இருந்து கவனிக்க மகளை அனுப்பி வைக்கும் படி கேட்டு எழுதியிருந்தாள் . மாமியாரே அனுப்பி வைக்க கிளம்பி லலிதாவுடன் வந்து தங்கிக் கொண்டாள்.நாட்கள்
விரைந்தன .குறிப்பிட்ட நாளில் ஆபரேஷன் நடைபெற்றது .பிறந்த ஆண் குழந்தை உரியவரிடம் ஒப்படைக்கப் பட்டது .மீதி இரண்டு லட்சமும் வைதேகிக்குக் கொடுக்கப் பட்டது .
“ வைதேகி ! இன்னும் இரண்டு வாரம் தங்கிவிட்டுப் போம்மா... !”
டாக்டராம்மாவின் அன்பில் கரைந்தாள் . அது வரை எந்த பிரச்சனையும்
இல்லை .ஆனால் ...இப்போது எல்லை மீறிப் போயி விட்டது..
நினைவுகள் அறுபட ......
விழி வெள்ளமாய் பெருகியது ...!
“ஏய் ! நீலிக்கண்ணீர் வடிக்காதே ... எங்கபோய்த் தொலஞ்ச....எவன்கூடப் போன ...?”
“ நிறுத்துங்க அத்தை ! இத்தன வருஷம் உங்க கூட இருந்தும் என்ன இப்படி பேச எப்படி மனசு வருது ?”
“டேய் அவளப் புடிச்சி வெளிய தள்ளுடா .....! “
ஐய்யோ ஐயோ ! சம்பந்தி வீட்டுக்குத் தெரிஞ்ச என்ன நடக்குமோ ?
ஒப்பாரி வைத்தாள் விசாலம் !
இன்னும் என்னடி பேசாம இருக்கே ….. சொல்லு ! பேசாம செத்து போயி
தொலஞ்சிருக்கலாம் ,....சண்டாளி ...!
“ வாய மூடுங்கம்மா ...!”கத்தினாள் லலிதா .”வைதேகி ! நீ பேசு ...உன் புருஷன் கிட்ட நடந்தத நீயே சொல்லு ....!”

“ என்னங்க ! என்ன மன்னிச்சிடுங்க ! நான் உங்களுக்குத் தெரியாம ஒரு காரியம் பண்ணிட்டேன் !”
“அடிப் பாதகத்தி ! பண்றதையும் பண்ணிட்டு பாசாங்கு பண்றியா ...?
தலை முடியைப் பிடித்து ஆய்ந்தாள் விசாலம்.
“தயவு பண்ணி நான் சொல்றதக் கொஞ்சம் கேளுங்க ...நம்ம சுந்தரிக்கு
நல்ல இடத்திலிருந்து வரன் வந்தது . அவங்க நாப்பது பவுன் நகையும்
ஒருலட்சம் ரொக்கமும் எதிர்பாத்தாங்க . மாப்பிள்ள பாக்க லட்சணமா
நல்ல வேலையில இருந்தார் .அவங்களுக்கும் நம்ம சுந்தரிய பிடிச்சிருந்தது.
சுந்தரி லேசா கால் சாச்சி நடக்கறதை அவங்க பெரிசு படுத்தல! “
“பணத்தால இந்தக் கல்யாணம் தடை பட்டுடுமோன்னு அத்தைக்கு
ரொம்ப கவலை .சரியா சாப்பிடாம ,தூங்காம புலம்பிட்டே இருந்தாங்க ...
அத்தை உங்களத்தான் மலபோல நம்பிட்டிருந்தாங்க ...! நீங்க துபாயில
பெரிய வேலையில ,கை நெறைய சம்பாதிக்கிறீங்கன்னுதான் அவங்க
நெனச்சிட்டிருந்தாங்க !அங்க உங்களுக்கு சரியான வேல இல்ல ...நீங்க சம்பாதிக்கிறது உங்க வயத்துப் பாட்டுக்கே சரியாப் போய்டும்னு இவங்களுக்குத் தெரியாது ...!!
ஒருநாள் கோயில்ல யதேச்சையா நர்ஸ் லலிதாவப் பார்த்தேன் ...!
பேச்சு வாக்குல அவங்க சுகந்தி பத்தி சொன்னாங்க ..! சுகந்திக்கு கல்யாணமாகி மூணு வருஷத்துல அவங்க கர்ப்பப்பைய எடுத்திட்டாங்களாம்...! ஆனா அவங்களுக்கு கொழந்த வேணும்னு ரொம்ப ஆசையாம் ! அதனால வாடகத்தாய்க்காக காத்திட்டிருக்காங்கன்னு கேள்வி பட்டேன் ... அவங்க கோடீஸ்வரி ...எவ்வளவு பணம்னாலும் கொடுக்கத்
தயங்க மாட்டாங்கன்னும் கேள்விப்பட்டேன் !
நான் ரொம்ப யோசிச்சேன் ...என் மனசு துடிச்சுது . நான் செய்யப்போற காரியம் எந்த விளைவையும் ஏற்படுத்தும்னு தெரியும் ! இருந்தாலும் எனக்கு வேற வழி தெரியல ! கடைசியில அவங்க குழந்தைக்கு வாடகைத்தாயாக
சம்மதிச்சேன் ,இந்த விஷயம் டாக்டரம்மா , நர்ஸ் தவிர வேற யாருக்கும் தெரியாது !
நாலு மாசம் வரைக்கும் சமாளிச்சு நம்ம வீட்லதான் இருந்தேன் .அதுக்கு மேல வயிறு காட்டிக் கொடுத்துடுமேங்கற பயத்துலதான் நர்ஸ் லலிதா வீட்டுல தங்கினேன் . எங்க அம்மாவுக்கு உடம்புக்கு கால் உடஞ்சு போச்சுன்னு அத்தைக்கு நானே லட்டர் போட்டேன் !
எப்படியோ மனசக் கல்லாக்கிட்டு காலத்தக் கடத்துனேன் , குழந்தை பிறந்ததும் கண்ணுலக்கூட பாக்கல.... பணத்த மூணு மாசத்துலயே கொடுத்துட்டாங்க ...எனக்கு கிடச்சப் பணம் மூணு லட்ச ரூபாயயும் நீங்க அனுப்புனா மாதிரி அத்தை பேருக்கு அனுப்பிட்டேன் ! அவங்களும் நீங்க அனுப்பினதா ரொம்ப சந்தோஷப் பட்டாங்க ...!
“ குழந்தைய ஆபரேஷன் பண்ணியெடுத்து பத்துநாள் தான் ஆகுது ...!பொறந்த உடனே உடமைக் காரங்க கிட்ட குழந்தையா ஒப்படைச்சுட்டாங்க
கல்யாணத்துக்குள்ள உடம்பு தேறிடும் . நீங்க வந்ததும் நடந்ததச் சொல்லி மன்னிப்பு கேக்கலாம்னு இருந்தேன் ....இப்படி ஒரு மாசம் முன்னாடி
திடுதிப்புனு வருவீங்கன்னு நான் நெனக்கலீங்க ....! நீங்க ஊர்லருந்து வந்ததைப் பாத்த நர்ஸ் அக்கா என்கிட்ட சொன்னாங்க அதான் டாக்டர்
சொல்லியும் கேக்காம ஓடி வந்தேன் ....!’
உங்ககிட்ட பாவமன்னிப்பு கேக்கதான் வந்தேன் ...எல்லாரும் கேவலமா
பேசறத தாங்க முடியலங்க ! ஆம்பிள்ள சம்பாதிக்கறதுக்காக எல்லை தாண்டிட்டா பொம்பள சுகத்துக்காக படிதாண்டிடுவான்னு ...தப்புக் கணக்கு போட்டுட்டீங்களே ...! எங்க இருந்தாலும் என் நெனப்பும்,மனசும் உங்களச் சுத்தித் தாங்க வரும் ! யார் என்னைப் புரிஞ்சுக்கலன்னாலும் நீங்க புரிஞ்சுப்பீங்கன்னு நெனச்சேனே ....என் நெனப்புல மண் விழுந்துடுச்சே !

“நமக்குத்தான் கொழந்த பாக்கியம் இல்ல ... நாம மகளா நெனைக்கிற நம்ம
சுந்தரி கல்யாணம் பணத்தால தடைபடறத என்னால தாங்க முடியல !
அதனாலதான் வாடகைதாயா இருக்க சம்மதிச்சேன்..... இந்தாங்க மீதி ரெண்டு லட்ச ரூபாய் ...! நான் பண்ணினது தப்புன்னா என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்க தயாரா இருக்கேங்க ...!”
மயங்கிச் சரிந்தாள் வைதேகி .
“அண்ணி .....!! எனக்காக நீங்க பண்ண தியாகத்தைப் புரிஞ்சுக்காம உங்கள வாய்க்கு வந்தபடி பேசிட்டேனே ....! நீங்க என் மேல பாசத்தக் கொட்டி வளர்த்தும் ,உங்க நல்ல மனசைப் புரிஞ்சிக்காம சல்லடையா தொளச்சுட்டேனே ...! அண்ணி ....! என்னை மன்னிச்சிடுங்க ...! என்னை வாழ வச்ச தெய்வமே நீங்க தான் ...!!
வைதேகியின் தலையை தன்மடியில் தூக்கி வைத்து விசிறியால் வீசிவிட்ட விசாலத்தின் விழிகளும் கசிந்தது . வாயடைத்து நின்ற ராமுவின் கண்களிலிருந்து உருண்டு விழுந்த நீர்பட்டு மெல்ல கண்விழித்த வைதேகியை சுந்தரி முத்தமழையால் நனைத்தாள்.
புரிந்த உறவுகளின் புனிதத்தை உணர்ந்த லலிதா நிம்மதிப் பெருமூச்சுடன் அங்கிருந்து நகர்ந்தாள் .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (11-Mar-14, 12:24 am)
பார்வை : 366

மேலே