உயிருடன் உயிராய் ஒன்றி கலந்து

மணமான நாள் முதல்
உயிருடன் உயிராய்
ஒன்றிக் கலந்து
உன்
அத்தனை உணர்விலும் நிறைந்து...

நீ சாப்பிட்டால்
அவளும் சாப்பிட்டு
நீ சிரித்தால் அவளும் சிரித்து...

இப்படி ஆண்டுக் கணக்காக
உன்னுள் உறைந்த அவளிடம்
மருத்துவர் சொன்ன வரிகள்...
"நீங்க மனதை திடமாய் வைங்க"
எந்த நிமிடமும் இருக்கலாம்"

கொஞ்சம் கொஞ்சமாக
உனது எலும்புகளையும்
தசைகளையும் புற்றுக் கிருமி
சாப்பிடுவதை அருகிருந்து
பார்த்து பார்த்து
அவள் சாப்பிட மறந்த கொடுமை
என்னவென்று சொல்வது??

வாசலில் திரைசீலை அசைகிறது
கதறுகிறாள் இளங்கொடி
உன்னை கூட்டிப் போக
எமன் வந்து விட்டானோ என்று??

நாளை இந்நேரம்
நீ இருப்பாயோ இருக்கமாட்டாயோ
என்று எண்ணி எண்ணி
சிந்தை கலங்கி
அவளும் தன்
வாழ் நாளை எண்ணும்
வேதனையை எங்கே போய் சொல்வது??

பெட்டியில் நகைகளை
பூட்டி பாதுகாக்க வேண்டிய
இளம் தேவதை அவள்...

உயிர் காக்கும் மூச்சுக் காற்றை
உனக்காக மருத்துவமனை
குடுவையில் வைத்து பாதுகாத்து....
என்ன கொடுமை இறைவா இதெல்லாம்...

இவளது வேதனையை
அருகிருந்து பார்க்கும்
தோழமை எனக்கு
மூச்சு நின்று விடுமோ??

(தோழியின் கணவர் நிலையும் தோழியின் நிலையும்)

எழுதியவர் : சாந்தி (11-Mar-14, 10:55 pm)
பார்வை : 155

மேலே