சிறுதூறல்

ஏண்டா... இப்படியே
இருந்தா எப்படி
அந்தா இந்தான்னு
ஆறு மாசம் ஆகிடுச்சு
கையிலிருக்கும் காசு
ஒரு மாசம் தாங்கும்
அதுக்கு அப்புறம்
யோசிடா கொஞ்சம்...

கொஞ்சமாய் கொஞ்சலும்
மிச்சமெல்லாம் வருத்ததோடு
கண்ணுக்கு காட்சியாக
காதலுக்கு சாட்சியாக
இருந்த காதல்மனைவி
சொன்னதுந்தான் தாமதம்

நா மட்டும் என்ன சும்மாவா
இருக்குறேன்
ஏறாத இடமில்ல பாக்காத ஆளில்ல
அப்படியே கிடைச்சாலும்
அடிமாட்டுச் சம்பளம்
இதுக்கு மேல என்னைய என்ன
செய்ய சொல்லுற

கொஞ்சமாய் சஞ்சலம்
மிச்சமெல்லாம் கோபத்தோடு
பதிலடிச்சான் சொல்லாலே
சொல்லெனும் பந்தாலே
சுப்பையா மவன் கருப்பையா

சுவற்றில் அடித்த பந்து
அடிச்ச வேகம் காட்டிலும்
கூடுதலா திரும்பி வரும்
அறியாமப்போனானே
அவமானப்பட்டானே....

இந்த எழவுக்குதான்
காதலிச்சு கல்யாணம்
பண்ணக் கூடாதுன்னு
சொல்லுறது ன்னு சொன்ன
கண்ணுக்கு காட்சியாக
காதலுக்கு சாட்சியாக
இருந்த காதல்மனைவி

ஈர்ப்பு விசை குறைந்து
கறைப்படிந்த காந்தமாய்
துருப்பிடித்த நெஞ்சமாய்
பத்தடி வீட்டிற்குள்
ஐந்தடி தூரமாய்

குப்புறப்படுத்துக் கொண்டு
குபுகுபுவென்றான் கருப்பையா
பெருமழையின் ஆரம்பமாய்
சிறுதூறல் தலையணையில்!

எழுதியவர் : உமர் ஷெரிப் (17-Mar-14, 12:12 pm)
பார்வை : 75

மேலே