++போர்++

சரவணன்...

படிப்பு அதிகம் ஏறவில்லை எனினும் பார்க்க லட்சணமாக இருப்பான். தனக்கு பிடித்தவளை நேற்று தான் கைப்பிடித்தான். இன்று பரபரப்பாக கிளம்பிக்கொண்டிருக்கிறான்.

அருகில் கலங்கிய கண்களுடன் எப்போதும் கலகப்பாய் காணப்படும் கலா...

நேற்றுவரை கல்யாண கலை கொண்டிருந்த வீடு, இப்போது வேறு உடை அணிந்து வேறு உருவத்துடன் காட்சி அளித்தது.

எல்லையில் சண்டை ஆரம்பித்துவிட்டது...

உடனே வரவேண்டுமென்ற அவசர அழைப்பு அவனுக்கு இன்று காலை விடியலின் போதே வந்து சேர்ந்தது.

சரவணன் தரைப்படையில் சேர்ந்து பத்து வருடங்கள் ஆகி இருந்தது. பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே கலாவைத்தெரியும். ஊரே மெச்சும் படி காதலில் திளைத்து இருந்தார்கள். ஒவ்வொரு முறை ஊருக்கு விடுப்பில் வரும் போதெல்லாம் திருமணப்பேச்சு அடிபடும். ஆனால் அவனது தங்கையின் திருமணம் நடக்காததால் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தார்கள். போன வருடம் தான் தங்கையின் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது. அதனால் இந்த வருடம் எப்பொழுது வந்தாலும் திருமணம் என்று அப்பொழுதே இரு வீட்டாரும் முடிவெடுத்துவிட்டார்கள்.

அதே போல போன வாரம் தான் சரவணன் விடுப்பில் வந்தான். திருமணமும் நேற்று தான் முடிந்தது. ஆனால் உடனே கிளம்ப வேண்டிய சூழ்நிலை..

மிக தைரியமானவன் சரவணன். அனைவருக்கும் தைரியமூட்டினான்.. முக்கியமாக கலாவிற்கு..

"கலா..! என்ன நீ கூடவா! இதோ இந்த சண்டை முடிஞ்சவுடனே அடுத்த நாளே லீவு போட்டுட்டு வந்தர்றேன். என்ன இப்படி அழுதுகிட்டு குழந்த மாதிரி..."

"என்ன நானா? நான் எங்க சரவணா அழுகறேன். இது ஆனந்தக்கண்ணீர். என் சரவணன் நாட்டுக்காக போர் செய்யப்போறத நினைச்சு.. கண்ணு பாட்டுக்கு அழுதுகிட்டு இருக்கு.. நீ தைரியமா போயிட்டு வா சரவணா.." என்று வாயை சிரித்தவாறு வைக்க முயன்று தோற்றவளாய் அழுகையை அடக்கமுடியாதவளாய் கஷ்டப்பட்டு கூறினாள் கலா.

பிரியாவிடை பெற்ற சரவணன் எல்லை நோக்கி பயணப்பட்டான்.


மூன்று நாட்கள் பயணத்திற்குப்பின் அவனது பணியிடத்தை அடைந்தான். அவனது அணியின் பலரும் பனி படர்ந்த மேல் பகுதியில் சண்டையில் ஈடு பட்டிருப்பதாக அங்கிருந்த ஒரு நண்பன் தெரிவித்தான். இவன் வருவதற்கு முன்பே இவனது அணியினர் இரண்டு மூன்று பேர் இறந்திருந்தனர். சரவணனையும் மேல் பகுதியில் சண்டையிட உடனடியாக கிளம்பும்படி ஆணையிடப்பட்டது.

நினைவு முழுவதும் கலாவின் மீது இருந்தாலும் தேசம் காக்க ஒரு வீரன் புறப்பட்டான்.

சண்டை நடந்து கொண்டிருந்த இடத்தினை அடைந்ததும், அந்த இடமே படு பயங்கரமாக காட்சி அளித்தது. எப்போது பார்த்தாலும் ஒரே வெடிகுண்டின் இரைச்சல் காதை பிளப்பதாக இருந்தது. எதிரி நாட்டினர் மலை முகடுகளில் இருந்து தாக்கிக்கொண்டு இருந்தனர். இவனது அணியினர் கீழ் பகுதியில் இருந்து இவர்களால் முடிந்த அளவு தடுத்துக்கொண்டிருந்தனர். இவர்கள் தரப்பிலேயே இழப்பு அதிகமாக இருந்தது. இவனது அணியின் தலைவர் முதற்கொண்டு அனைவருமே பதட்டமாக காணப்பட்டனர்.

அவர்கள் பேசிய பேச்சிலிருந்து எதிராளி சிறிது சிறிதாக முன்னேறிக் கொண்டு வருவதாகப்பட்டது. தூக்கம், உணவு எதைப்பற்றியும் எவருக்கும் எதுவுமே நினைக்கத் தோன்ற‌வில்லை.

அரைத்தூக்கமும், அரைவயிறுமாக ஒருவர் மாற்றி ஒருவர் தன் தாய் நாட்டிற்காக மாறி மாறி முயற்சித்துக்கொண்டு இருந்தனர்.

சரவணன் அங்கு அடைந்த மறு நாளே இவனது அணியினர் நான்கு பேர் எதிரி நாட்டினரால் கொல்லப்பட்டனர். அவர்களது உடலை ஒரு வண்டியின் மூலமாக பணியிடத்திற்கு அனுப்பி, பின் அங்கிருந்து அவரவர் ஊரிற்கு அனுப்பும் பணியும் நடந்துகொண்டு இருந்தது.

"யாருக்கும் எதுவும் நிகழலாம். நமது சிந்தனை எல்லாம் நமது நாட்டை காப்பதில் தான் இருக்க வேண்டும். எதிரிகளை துரத்தி அடிப்போம். தைரியமாய் எதையும் எதிர்கொள்வோம்", என அடிக்கடி இவனது அணித்தலைவர் அனைவருக்கும் தைரியம் ஊட்டிக்கொண்டிருந்தார்.

எதிராளி அதிக ஆட்களை கொண்டிருப்பதாகப்பட்டது. அவர்களைத் தடுத்த நிறுத்த என்ன வழி என்று ஆராயப்பட்டது.

யாராவது ஒருவர் அவர்களிடம் சரணடைவது போல் சரணடைந்து, பின் ஏதாவது திட்டம் போட்டு, ஏதாவது சாதனை நிகழ்த்தினால் மட்டுமே வெற்றி அடையமுடியும் போல சரவணனக்கு பட்டது.

தனது யோசனையை அணித்தலைவருக்கு கூறினான். அவர் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

சரவணன் அன்று இரவெல்லாம் தூங்கவேயில்லை. அந்த சிந்தனையே மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது. அடுத்த நாள் காலையில் சரவணனைக் காணவில்லை.

மதிய நேரத்திற்குப்பின் எதிரணியினரின் பெரும் பகுதியினர் ஒரு பெரும் வெடிகுண்டால் கொல்லப்பட்டதாக செய்தி வந்தது. அது கண்டிப்பாக சரவணனால் தான் என்பதை கண்ணீர் மல்க அணித்தலைவர் அவனது அணியினர் அனைவருக்கும் தெரியப்படுத்தினார்.

இவர்கள் போரிட்ட இடமானது எல்லையிலையே ஒரு முக்கியமான பகுதி. இந்த பெரிய குண்டு வெடிப்பைக் கண்டவுடன் வேறு பகுதிகளில் இருந்த கொஞ்ச நஞ்ச எதிராளிகளும் அவரவர் பகுதிக்கே திரும்பிச்சென்றனர்.

போரும் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

போர் முடிந்து கணவன் வருவான் என எதிர்பார்த்து காத்திருந்த கலாவிற்கு கணவனின் உடல் கூட திரும்ப வரவில்லை.

ஆனால் அவனது தியாகச்செய்தி நாடு முழுவதும் பரவியது.

அவனது அணித்தலைவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளின் காரணமாக சரவணன் பெயர் ""பரம் வீர் சக்ரா"" விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது.

அரசாங்கமும் சரவணனுக்கு ""பரம் வீர் சக்ரா" விருது வழங்குவதாக அறிவித்தது.

கலா நியூ டெல்லிக்கு அழைக்கப்பட்டாள்.

ஜனாதிபதியின் கைகளால் சரவணனின் ""பரம் வீர் சக்ரா"" விருது கலாவிற்கு அளிக்கப்பட்டது. அதை ஒரு குழந்தை போல கண்களில் நீர் வழிய கலா பெற்றுக்கொண்டாள்.

அவளைப்பார்த்து ஜனாதிபதி வணங்கி நின்றார்.

நாடே இந்த ஒளிபரப்பை தொலைக்காட்சியில் பார்த்து சரவணனின் பெருமைகளை பேசிக்கொண்டனர்.

சரவணனின் விருதுடன் கலா தனது வாழ்நாளை கழிக்கலானாள்.

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (20-Mar-14, 6:18 am)
பார்வை : 192

மேலே