இன்றுதான் முதன் முதலாய்

இன்றுதான் முதன் முதலாய்
என் அப்பாவின் வலியையும் மகிழ்ச்சியையும்
முழுமையாய் புரிந்துகொண்டேன்!

இன்றுதான் முதன் முதலாய்
நண்டுகள் கால்கள் நான்
கொண்டாலும் மலைகள் கடக்கின்ற
உத்வேகம் உள்ளத்தில் கொண்டேன்!

இன்றுதான் முதன் முதலாய்
நடுகடல் நான் வீழ்ந்தாலும்
மரதுண்டேறி கரையை
பிடிக்கும் பொறுப்பை உணர்ந்தேன்!

இன்றுதான் முதன் முதலாய்
அநாவசியம் ஓட விட்டு
அத்தியாவசியம் அருகில் நின்றேன்!

இன்றுதான் முதன் முதலாய்
மாதம் ஒரு முறை முடித்திருத்தம் போய்
இரு மாதம் ஒருமுறை என்று
மாதங்கள் திருத்திக்கொண்டேன்!


இன்றுதான் முதன் முதலாய்
"நாம் இருவர் நமக்கு இருவர்" வாக்கியம்
கவிதையாய் ரசிக்க துவங்கினேன்!

இன்றுதான் முதன் முதலாய்
சிகரெட் துண்டை விட
இலகுவாய் விரல்கள் உண்டென்று உணர்ந்துகொண்டேன்!

இன்றுதான் முதன் முதலாய்
முத்தங்கள் காதலர்களுக்கு மட்டுமல்ல
பெற்றோர்களுக்கும் சொந்தமென்று
புரிந்துக்கொண்டேன்!

இன்றுதான் முதன் முதலாய்
குதிரைகளுக்கும்
பொதி சுமக்கும்
காலம் வருமென்று
அறிந்து கொண்டேன்!

இன்றுதான் முதன் முதலாய்
வலிகள் மறைக்கபோகும்
நடிகனாய் அரிதாரம்
பூசிக்கொண்டேன்!

இன்றுதான் முதன் முதலாய்
"காப்பீடு" மனிதன் கட்டும் "குருவிக்கூடு"
காப்பர் "டி" காப்பார் "டா"
என்றும் உள்ளுக்குள் உரைத்துக்கொண்டேன்!

இன்றுதான் முதன் முதலாய்
என் மனைவியை
கடவுளாய் பார்த்தேன்,
அவள் அருகில் தலைகீழாய்
தொங்கிய குளுகோஸ் பாட்டிலை
ஆலயமணியாய் பார்த்தேன்!

இன்றுதான் முதன் முதலாய்
தலைப்பெழுத்து
நிர்வாணமாய் நிற்கின்ற
மனிதப்பெயர்களுக்கு
மானம் காக்கும் ஆடை
என்று அர்த்தம் கொண்டேன்!

ஆம்! இன்றுதான்
முதன் முதலாய் நான் அப்பாவானேன்!!!

எழுதியவர் : த பிரபு (30-Mar-14, 5:18 pm)
பார்வை : 104

மேலே