மணப்பெண்ணாகிய நான்

பெண் பார்க்கும் படலத்தில்
காபி காரம் கொடுத்துவிட்டு
கை கூப்பி வணக்கம் சொல்லி
கண்ணுயர்த்தி கண்டுகொண்டேன்
என் கதா நாயகன் இவனோவென்று...
இருபார்வை ஒரு நேர்கோட்டில்
அந்த கணம்
என் பெண்மை சில்லிட்டு
மயிர்கால்கள் நிமிர்ந்திட்டு
மருதாணி பூசாமல்
சிவந்தது முகம்...
சம்பந்தம் முடிவாகி
நிச்சயிக்கும் நிலையினிலே
இளையராஜாவின் தோடி ராகம்
எனக்காக மட்டுமெ
என் காது மடல் நுழைந்து
வாலிபத்தின் வீணை மீட்டியது
நிச்சயித்த அந்நாளில்
அருகி நின்ற அப்பொழுதில்
ஆண் வாசம் ஊடுருவி
நுரையீரல் துளைத்து
இதய துடிப்போடு கலந்தது
உரசாமல் உரசி
புகைப்படத்திற்கு
காட்சி தந்த அப்பொழுதில்
கரைந்தது என் கன்னி தவம்
விரல் பற்றி
மோதிரம் அணிவித்த
அந்நொடியில்
பஞ்சுப் பொதியை தழுவிய
மென்மை
தேகம் சிலிர்த்து நின்றேன்
திருமண அழைப்பிதழ் கண்டு
இணைந்த நம் பெயர் கண்டு
ஆயிரம் மொட்டுகள்
ஒன்றாய் மலர்ந்து
ஆலிங்கனம் செய்தது
திருமண நாள் காண
இதயம் ஏங்கி தவித்தது...
ஓ... ஒன்றை மறந்தேனே
பெண்ணான என்னை
கண்ணாக எண்ணிய
என் பெற்றோரை மறந்தேனே...
பிரியும் நாள் தொலைவில் இல்லை
பேதை மறந்தேனே!
ஒற்றை பெண்ணாய்
என்னை பெற்று
ஊன் உறக்கம் தொலைத்த
தெய்வங்களை மறந்தேனே...
கண்ணீர் பெருக்கி
ஆறாய் ஓடி
அரித்தெடுத்தது
காதல் மறந்து
கண்ணீர் சொறிந்து
கனவுகள் தொலைத்தேன்
மணப் பெண்ணாகிய நான்

எழுதியவர் : சித்ரா ராஜ் (3-Apr-14, 9:02 pm)
பார்வை : 190

மேலே