என் சின்ன கண்மணிக்கு

சின்னத் தலையசைத்து
பூவிதழ் குவித்திங்கு உன்
மழலை மொழி ரசிக்கும் நாளென்றோ!

தத்தி எட்டு வைத்து
செம்பாதம் பதித்திங்கு என்
எழிலி நடை பார்க்கும் நாளென்றோ!

உச்சிதனை முகர்ந்து
அள்ளி அணைத்தெடுத்து உன்
கன்னம் பதித்திடும் நாளென்றோ!

செல்லக் குறும்புகளை
மெல்ல ரசித்தபடி என்
உள்ளம் சொக்கி விடும் நாளென்றோ!

காகித நோட்டுகளை
தூக்கி நானெறிந்து என்
கண்மணி உனைத் தேடும் நாளென்றோ!

மெல்ல விழி மூடி என்
தோளில் கண்ணுறங்க
ஆராரோ நான் பாடும் நாளென்றோ!

கன்னக் குழி தெரிய
கள்ளம் கபடமின்றி நீ
சிரிக்க நான் சிரிக்கும் நாளென்றோ!

உன் மடியே பஞ்சணையாய்
உன் மழலை தாலாட்டாய் நான்
துயில்வேன் உன் சேயாய்!
இதுவன்றி யானொன்றும் கேட்கவில்லை..
உயிர் நீயே தானன்றி எவருமில்லை!

எழுதியவர் : ராஜராஜேஸ்வரி (4-Apr-14, 2:45 pm)
Tanglish : en sinna Kanmanikku
பார்வை : 244

மேலே