உன்னை கண்ட நாள் முதலாய்
உன்னை கண்ட நாள் முதலாய்
கிறக்கம் நீ தந்தே என்
உறக்கம் கலைத்தாயடி - பெண்ணே என்மேல்
இரக்கம் கொள்வாயடி!
மின்னல் ஒளி பிடித்து உன்
முகம் பார்த்திட வேண்டும்
உன் விழியின் ஒளி கண்டு
மின்னல் கூசிட வேண்டும்!
ரோஜா இதழ் கொண்டு உன்
தேகம் தீண்டிட வேண்டும்
உன் ஸ்பரிச மென்மை கண்டு
ரோஜா நாணிட வேண்டும்!
உன் விழிகளில் எனையே கண்டிட வேண்டும்
என் வாழ்வின் விளி வரை நீயே வேண்டும்!
உன்னுள் எனக்காய் ஓரிடம் வேண்டும் அதில்
உன்னுடன் நானே வாழ்ந்திட வேண்டும்!
அடி வானச் சிவப்பெடுத்து உன்
கன்னம் பூசிட வேண்டும்
உன் நாணச் சிவப்பினில்
ஆதவன் மறைந்திட வேண்டும்!
இதய தேசத்தில் உனையாளும்
மந்திரம் கற்றிட வேண்டும்
நம் காதல் போரினிலே
இந்திரனை வென்றிட வேண்டும்!
தீராத ஏக்கங்கள் இனியும் வேண்டாம்
ஆராத இன்பங்கள் நீ தர வேண்டும்!
கலையாத கனவுகள் தினம் தந்திட வேண்டும்
அலையாய் உன் நினைவுகள் தங்கிட வேண்டும்!
உன்னை கண்ட நாள் முதலாய்
எனையே நானும் மறந்தேனடி
இந்த ஜென்மம் நான் முடிக்க என்
ஜீவன் எனக்கே தருவாயடி!