குடிகாரன் உன்னோடு

குடி வெறியில்
குலவை போட்டு
கொத்தாய் என் முடி பற்றி
காலில் இட்டும்
மிதிக்கும் உன்னை
காலுடைத்து மூலையிலே
முடமாக்கி கஞ்சி ஊத்த
ஒரு நிமிடம் ஆகாது...
நீ தொலைத்த கெளரவத்தை
நான் தொலைக்க வேண்டாமென்றே
பூமியாய் பொறுமை கொண்டேன்
ச்சீ....இவன் வேண்டாமென்று
மஞ்சள் கயிற்றை கழற்றி வீசி
வீட்டை விட்டு வெளியேற
ஒரு நிமிடம் ஆகாது...
நடத்தை கெட்டு போனாளோ?
நல்லவள் தான் வளர்த்தாளோ?
என்று...ஊரு சனம் பேசி விட்டால்
எனை பெற்றவள் கதறிடுவாள்
உயிர் துறக்க எண்ணிடுவாள்
வாழா வெட்டி பட்டம் கொண்டு
பிறந்த இடம் நான் போனால்
அண்ணனுக்கு வாய்த்த
அருமை அண்ணி
கை கொட்டி சிரித்திடுவாள்....
கோபித்து நான் போனாள்
பங்காளி நகைத்திடுவார்
பகையாளி ரசித்திடுவார்
பார்ப்போர் பரிகசிப்பார்
ஒப்புக்கு கணவனாகி
உப்புக்கும் பெறாத உன்னை
உதாசீனப் படுத்த
என் பெண்மை மறுக்கிறது
என் மரபும் தடுக்கிறது
அஞ்சி வாழவில்லை
அடிமைப்பட்டு கிடக்கவில்லை
குலப் பெருமை காத்திடவே
குடிகாரன் உன்னோடு
குடித்தனம் நடத்துகின்றேன்...

எழுதியவர் : சித்ரா ராஜ் (9-Apr-14, 3:41 pm)
Tanglish : kudikaaran unnodu
பார்வை : 1058

மேலே