வழியெங்கும் பிதற்றுபவனின் குரல் 20
கவிஜியின் அடுத்த கவிதை...
"பிணம் காக்கும் பாதங்கள்".
தலைப்பே கொஞ்சம் அதிர்ச்சியாகவும்...எதிர்பார்ப்பைத் தருவதாகவும்
இருந்தது. பாதங்கள் எப்படி பிணத்தைக் காக்கும் என்ற கேள்வியோடு...இதுவரை நானெல்லாம் இப்படி யோசித்தது கூட இல்லையே என்ற எண்ணமும் எனக்குள் வந்து போனது.
வாழ்வின் நிலையாமையின் சுழற்சியை...இலையில் துவங்கி கடவுள் வரை எறும்பு, மனிதனின் ஊடாக அழகாகச் சொல்கிறது கவிதை.
"எறும்பு தூக்கிச் செல்லும்
உணவைப் பகிர்ந்துண்ண
காத்துக் கிடக்கிறார் கடவுள்"
"கடவுளின் கண்ணீர்....
விளைந்து கிடக்கிறது
கல்லறைத் தோட்டங்கள்".
"கல்லறையின் காவலுக்கும்
நாளைய பிணம் நடமாடுகிறது"
"பிணம் தூக்கும் நால்வரின்
பாதங்களில்...
வாழ்ந்து கிடக்கிறது எறும்பு"
"விழப் போகும் இலையிலும்
சறுக்கி விளையாடுகிறது எறும்பு"
"எறும்பைக் காக்க
நீரில் மிதக்கும் இலையில்
இணுக்கிய காயம்"
"எப்போதும் தயாராய்
விழவே காத்துக் கிடக்கிறது....
எங்கேனும் ஓர் இலை".
எறும்பு...இலை..மனிதன்...கடவுள் என படைப்பின் தொடர்புகளையும்...அவற்றின் நிலையாமையையும் சொல்லிச் செல்கிறது கவிதை.
எறும்பு கொண்டு வரும் உணவுக்காகக் காத்திருக்கும் கடவுளையும்...
கடவுளின் கண்ணீரால் விளைந்த கல்லறைத் தோட்டங்களையும், நாளைய பிணங்கள் கல்லறைக்குக் காவல் இருப்பதையும்...பிணம் தூக்குபவனின் காலின் கீழ் ஒடுங்கிச் செல்லும் எறும்புகளையும்...மரமேறி...இலையில் சறுக்கும்
எறும்புகளையும்...எப்போதும் விழத் தயாராய் இருக்கும் ஒரு இலையையும் சொல்லி...
இந்தக் கவிதையைக் காட்சிப் படுத்தி இருக்கிறார் கவிஜி.
ஒரு அசாதரணமான கற்பனை. அதன் காட்சி தொகுப்பு என வெகு வித்தியாசமாய் இருக்கிறது இந்தக் கவிதை. இயல்பாய் ஒரு காட்சியின் மேல் விரியும் சாதாரண கவிதைகளிலிருந்து வெகுவாய் வித்தியாசப் பட்டு நிற்கிறது இந்தக் கவிதை.
நாளைய பிணங்களை...இன்றைய பிணம் காக்கும்
பாதங்களாய்...ஒரு அசாதரணமான கற்பனையின் வழியாக காட்சிப் படுத்தி...வயதுக்கு முதிர்ந்த அளவில்....நிலையாமையின் தத்துவம் சொன்ன
கவிஜிக்கு என் வாழ்த்துக்களைச் சொல்லி...
மீண்டும் வருவேன்...காலத்தின் பெரும் துணையோடு.