அவள் எனக்கு வேண்டும்-1

மதியம் 3 மணி.

மாமரதோட்டத்தில் மல்லாந்து படுத்து உறங்கிகொண்டு இருந்தவன்…..
சட்டென சத்தம் கேட்க விழித்தான். மரத்தில் இருந்து குதித்தவள் அவனை பார்த்து, “ப்ளீஸ்! ப்ளீஸ்ய்யா! உங்க தாத்தாட்ட சொல்லிடாதிங்க…

இரண்டே இரண்டு மாங்காதான்… எங்க அக்கா புள்ளத்தாச்சியா இருக்கு… அதுக்குதான்…” என்றாள்.

அவன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான்.

பாவாடை தாவணியின் பருவப்பெண்ணாக செப்புசிலைபோல் இருக்கின்றாளே… இரட்டை சடை பின்னளில் கிராமத்து மஞ்சள் டிசம்பர் பூ அவள் முன் பக்கம் வந்து விழ.. அவளை கண்களாலேயே கவி எழுதிக்கொண்டு இருந்தவன்…
சட்டென நிதானத்துக்கு வந்தான். இன்னும் அவள் பேசிக்கொண்டேதான் இருந்தாள்.

“ஏய்! கூல் கூல் என்ன யாருன்னு உனக்கு தெரியுமா?”, என்றான்.

“ஓ! தெரியுமே நம்ம கணேஷ் தாத்தா பேரன் தானே நீங்க… ஊருக்குள்ள எல்லாரும் பேசிக்கிட்டாங்க”, என்றாள்.

“ஆமா எங்க ஊருல இந்த டவுசரெல்லாம் போடாதிங்க... சிரிப்பு சிரிப்பா வருது”, என்று சொல்லி விட்டு பறந்து விட்டாள்.

இதுவரை எத்தனையோ பெண்களிடம் சகஜமாக பேசிருக்கேன். பழகி இருக்கேன்.

இதுவரை யாரிடமும் ஏற்படாத ஒன்று இப்போது அவனிடத்தில்… ஒரு இனம் புரியாத ஈர்ப்பு என்னவென்று தெரியவில்லை..

காலேஜில் எத்தனையோ பேரை கிண்டல் செய்தவன். காதல் என்றாலே பிடிக்காத ஒரு இளைஞன். இவனையும் ஒருத்தி கண நேரத்தில் ஈர்த்துவிட்டாளே என்ன இது என்று புலம்பினான்.

என்ன இது நம்ம ஊருல எல்லோரும் இந்த ஷார்ட்ஸ்ல தானே சுத்துவோம். இத டவுசர்னு கிண்டல் செய்றாளே..

அதற்குள் தாத்தா வந்து விட,

“என்னப்பா இது. இன்னும் நீ வீட்டுக்கு வரலன்னு பாட்டி தேடிட்டு இருக்காங்க‌..என்ன போலாமா”, என்றார்.

“ம் ம் தாத்தா போலாம்”

“தாத்தா நீங்க கட்டியிருக்கீங்கள்ள இது போல எனக்கு கட்ட பழகி குடுங்க”, என்றான்.

“என்னப்பா இது! திடீர்ன்னு இது வேட்டி…!”

“லுங்கி கட்ட பழகி குடுங்க தாத்தா”, என்றான்.

“அப்பா அங்க இருக்கும் போது கட்ட சொல்வாரு, நாந்தான் விட்டுட்டேன். இப்போ இங்க வந்த பிறகுதான் தெரியுது எவ்வளவு முக்கியம்”, என்று இழுத்தான்.

அதற்குள் வீடு வர

பாட்டி ஓடி வந்து, “ஏம்ப்பா சிவா! என்ன இது, பகலெல்லாம் இப்படி தூங்கிட்டு ராத்திரி உக்கார்ந்துகிட்டு எப்ப பாரு.. இந்த பொட்டிய தட்டிக்கிட்டு இருக்கியே.. என்ன பழக்கம் இது ?”

“அச்சச்சோ! பாட்டி இது லேப்டாப், இதபத்தி சொல்லித் தர்றேன். உட்காருங்க”, என்றான்.

“தாத்தா! தாத்தா!”, என்று குரல் கேட்க

“சிவா! யாருன்னு பாரு?”, என்றாள் பாட்டி.

அவளே தான்.

"பாட்டி இருக்காங்களா..!",ன்னு கேட்டுக்கொண்டே சட்டென அவனை உரசிக்கொண்டு அவள் உள்ளே வந்தாள்.

(தொடரும்)

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (16-Apr-14, 7:00 pm)
பார்வை : 732

மேலே