உனதுநெஞ்சில் வாழ்வேன் உவந்து - நேரிசை வெண்பாக்கள் 21
விழிவழி என்னுள்ளே தந்தாய் வருகை,
மொழிவழியில் மாலையின் அர்த்தம் - எழிலே
மனவழி சொல்லி மகிழ்ந்துனைத் தந்தாய்
உனதுநெஞ்சில் வாழ்வேன் உவந்து! 1
பூவே புதுமலரே புன்னகை பூத்தவளே!
நாவினில் தேனே! நயனமதில் – பூவிதழே!
வானம் வசப்படும் வாழ்வும் அளித்தாயே!
நானுமினி வாழ்வேன் மகிழ்ந்து! 2
காதல் கவிதையாம் கண்கவர் தேவதைநீ
யாதலால் அந்திப் பொழுதினில் - காதலர்
பாதையில் நின்றயெனைப் பார்வையால் வென்றுநற்
பாதை விரித்தமலர்ப் பா! 3
மானே! மனதிற் கினியமஞ் சள்நிலாவே!
தேனே! சுவைமிகு தீந்தமிழே! – மீனேதான்!
ஏனோ உனதுபார்வை இன்சுவையாம் என்னுள்ளே
தேனோடை யாய்ப்பாயும் போது! 4
பூங்குழலி புன்னகை செய்யும் புதுக்கவிதை!
மாங்கனிக் கன்னமோ மன்மத – தேங்கிண்ணம்!
தேனிதழ்கள் இன்பத்தின் தேனாறு ஆகுமே!
நானின்றேன் என்னை இழந்து! 5
கவின் சாரலனின் 'காதல் அந்தாதி' யின் முதல் ஐந்து பகுதிகளை நேரிசை வெண்பாக்களாக முயற்சித்திருக்கிறேன்!