உயிர்பித்தவன் நீ
மரணத்தில் மாயவிருந்த என்னை
மீண்டும் உயிர்பித்தவன் நீ
உன்
பொன்விரல்கள் தீண்டும்போது-தீப்
புண் வலியும் இனிக்கிறது
உன் பூவிரல்கள் என் மேனிதடவ
நான் புது ராகம் மீட்டுகின்றேன்
ஏதோ பிறந்து
ஏதோ வளர்ந்து
ஏதோ இறந்து சாம்பலாகும் முன்னாலே
சட்டெனக் கண்டெடுத்து
எனை அணைத்த கண்ணனே
நான் உனக்கு கிடைத்ததை விட
நீ எனக்குக் கிடைத்ததில்தான்
நான் பெருமையடைகிறேன்
உன் உதடுகள் ஒத்தடமிடும்போது
என் உயிர் துளிர்க்கிறது
தீப்பட்ட காட்டத்தில்
தென்றல் தீண்டும் சுகம்பிறக்கிறது
உன் மூச்சுக்காற்று படும்போது
பாடை ஏறப்போகவிருந்த என்னையும்
மேடை ஏற்றி மகுடம் சூட்டியவன் நீ
உன் மூச்சிருக்கும் வரைதான்
என் பேச்சிருக்கும் -நீ
உள்வாங்கிய மூச்சுக்காற்று
என்னுள் நுழையும் போது
இசைநாதம் ஒலிக்கிறது
உன் பூவிதழ் முத்தத்தில் திளைக்கவும்
உன் மூச்சுக்காற்றில் உயிர்பெறவும்
இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும்
சூடு படக்காத்திருக்கிறேன்
"நான் புல்லாங்குழல்"