உன்னோடு சேரும் ஒருநேரமே

உன்னோடு சேரும் ஒருநேரமே
அந்த மலைக்கோயிலுக்கான
அவளின் அடிப்பிரதட்சண
வேண்டுதலுக்குப் பின்னால்
என்றோ தொலைந்துவிட்ட
முரட்டுமாமனைப்பற்றிய
ஊராரின் சிலேடைதூறல்களுக்கிடையில்
உடைத்த தேங்காயில்
பூவிழுந்திருப்பதாக
உரக்கச்சொல்லிய பூசாரியின்குரல்
என்றாவது வருவான் என்னும்
அவனின் வருகையை
மேலும் திடப்படுத்தியது அவளுள்
அவளின் இடைவிடாத
பிடிவாதங்களுக்குள்
கற்பூரமடித்து சொல்லிய
அவனின் பொய்சத்தியங்களின்
பிரதியொலிகள்
அசைபோட்டப்படியேதானிருக்கிறது
அன்றொரு நாளில்
ஆற்றுப்பாலத்தில் இருந்தபடி
அவனுடனான
அளவளாவுதலுக்கிடையே
காற்றடித்து பறந்துவிலகிய
தாவணியைக்கூட கண்டுகொள்ளாமல்
வானத்தையேவெறிக்கபார்த்து
கவிதை சொல்லியவன்தானே அவன்
எப்படி மறப்பாளதை
எவ்வளவுதான் மழையில்
குடைப்பிடித்து நடந்தாலும்
அத்தண் திவலைகளின்
ஓரிரு துளிகள்
மேலே சிந்திடத்தாஞ்செய்கின்றது
அதுபோலத்தான் அவனின்
நினைவுகளும் அவளுள்
வேர்விட்டு மரமாகியிருக்குமல்லவா ??
முகாரிப் பொழிகின்ற
ஆரிருளில்
கண்ணீர்க்கழுவுகின்ற கதவோரம்
விழிக்குறுகி விளக்குவைத்து
சாய்ந்துநின்றவளின் வாழ்வில்
நாயகனின்வருகை முனைப்பாகிடுமா ??
இல்லை
நனவோடை புனைவாகிடுமா ??
அனுசரன்