சிறப்புக் கவிதை 42 சியாமளா ராஜசேகரன் நட்பு
நட்பு
நுரை பொங்கி வழியும் கடலோர அலையாய்
தரை தொட்டுத் தெறிக்கும் சாரல் மழையாய்
கரை புரண்டோடும் வற்றாத ஜீவநதியாய் - மேகத்
திரை புகுந்தோடும் வட்ட முழு மதியாய்
மேனி வருடிச் செல்லும் இளம் பூங்காற்றாய்
தேனி தேடி ஓடும் மதுநிறை மலராய்
வானில் கோலமிடும் மின்னல் கீற்றாய்
வேனில் கால நிழல் தரும் தருவாய்
வனப்பானதும் வசீகரமானதும்
சுகமானதும் சுகந்தமானதும்
அன்பானதும் அருமையானதும்
இன்பமானதும் இனிமையானதும்
உயர்வானதும் உன்னதமானதும்
எழிலானதும் எடுப்பானதும்
கலசமானதும் கவசமானதும்
சிகரமானதும் சிரஞ்சீவியானதும்
வையகத்தில் என்றென்றும்
வைரமாய் வைடூரியமாய்
வைராக்கியம் ஏதுமின்றி
வைபோகமாய் வாழ்வது நட்பு ஒன்றே !!!