கண்ணீர் விதை
இணையோடு
மஞ்சப் பகிர்வில் நாளும்
கூடி மகிழ்ந்ததும்
நெஞ்சம் நெகிழ்ந்ததும்
அத்தனையும் வார்த்தெடுத்து
ஊற்றி வைத்த
தங்கக் குடுவை
தளிர் நடை போடும் என்
தங்கச் சிட்டு
பறந்ததே என் கைவிட்டு
ஏதோ ஓர் நாள் நான்
முகம் கோணச் சகியாமல்
வார்த்தைக் கண்ணுக்கும்
அகப்படாமல்.
அய்ந்திரண்டு திங்கள்
அயராது நான் சேர்த்த
அழகுத் தேன்கூடு
என் கண் பட்டே உடைந்ததே.
ஒழுகிய மாயத்தேன்
விரல் நுனிக்கும்
சிக்கலையே.
விழிகூட மூடாமல்
உண்ணவும் மறந்து நான்
வரைந்த
மொழியில்லா
வண்ணக் கவிதை!
கால (ன்) நீர் ஊற்றி அதை
காற்றோடு கலைத்தானே
தொட்டெடுத்த எச்சம் கூட
மிச்சமின்றி.
அவனா தெய்வம் ?
இங்கோ
பாதையெல்லாம்
விதைத்து விட்டேன்
கண்ணீர் விதை
ஒரு துளி பாக்கியின்றி
எரிந்து தீருது என்
மனச் சிதை.