ஆறும் ஆழமாய் அழிந்து போகும் - அதுவரை வேடிக்கை பார்ப்போம்

இரவை ரசிக்க
இதயம் நினைத்து

அருகில் இருக்கும்
ஆற்றை நோக்கி
பாதம் நகர

உருண்டு செல்லும்
சக்கரத்தில் செத்து
சிதறிய சாலையின்
மண் துகள்
முகம் முழுவதும்

கண்ணில்
மண் தூவி
கண நேரத்தில்
கடந்தது வண்டி

வெளிச்சம் இல்லா
இரவிலும்
ஆளை மதிக்காமல்
வேகமாய் சென்ற
வண்டியில்

அவசரமாய்
அடித்து செல்லப்படுவது
அந்த
ஆற்று படுகையின்
அடித்தள மணல் .. !!

அதே வழியில் ....

நடந்து சென்ற
நால்வர்
நகர்ந்து நின்று
வேடிக்கை பார்த்தது

மனிதம் இல்லா
மணல் கொள்ளையை .. !!


ஏதோ ஓர் இரவில்
நிலவை ரசிக்க
அடுத்த தலைமுறை
மணல் மேல்
பாதம் பதிக்கும் முன்

ஆறும்
ஆழமாய்
அழிந்து போகும்

அதுவரை
வேடிக்கை பார்ப்போம்.. !!

ஆற்றங்கரை
கொள்ளையனின்
வளர்ச்சி எனும்
நம்
வளத்தின் சுரண்டலை .. !!


--- இராஜ்குமார்


----------------------------------------------------------------------------
நால்வர் - நாம் அனைவரும் .

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (30-Apr-14, 12:24 am)
பார்வை : 532

மேலே