திசைகள் வெளுக்கும்

எங்கும் ஒரே புழுக்கம்
எதுவரைக்கும் இருக்கும்
மிஞ்சி மிஞ்சிப் போனால்
சண்டமாருதம் வெடிக்கும்
துஞ்சுகின்ற வாழ்வினில்
துயரமா இருக்கும்?
அஞ்சியா அடங்குவோம்
அரக்கனே நிறுத்து!

நெருப்பென நம்படை
செருக்களம் குதிக்கும்
நல்ல துணைப் படை
நமக்கினித் தோளுடன் நடக்கும்
எதிர்த்திடும் பகைவன் - உன்
உயிர்க் குலை நடுங்கும்-தாய்மண்
சிலிர்த்திட அடிமையின்
விலங்குகள் தெறிக்கும்!

வஞ்சகச் சூழ்ச்சியை
வாய்மைகள் எரிக்கும் -எதிரி
வாலினைப் பற்றிடும்
துரோகியை வதைக்கும்-எம்
பிஞ்சுகள் பூக்கள் காயினை
பறித்தவன் வாழ்வினை
வெஞ்சின மறவரின்
விரல்நுனி முடிக்கும்

ஆர்ப்பரித்தெழும் கடல் அலை
கரை தொட துடிக்கும்
அதன் அணைப்பிலே கடற்புலி
கண்ணிகள் விதைக்கும்
போர்க்கெழும் பகை உடல்
தசை துகள் படப் பறக்கும்
பொங்கும் மா செங்கடல்-புதுப்
பரணியைப் படைக்கும்!

கந்தகக் காற்றின்
கைகளில் தவழும்
கல்லறைத் தெய்வங்கள்
கண்களைத்திறக்கும்
வெங்களம் ஆடிடும்
வேங்கைகள் காண
திங்களும் எழுந்திட
திசைகளும் வெளுக்கும்!

எழுதியவர் : சிவநாதன் (18-May-14, 4:03 am)
பார்வை : 105

மேலே