என் தேடலின் வலி

என் தெருமுனை தாண்டாத
தேடல்களில் தினம் தினம்
தற்கொலைகள்! தரிசுகளுக்காகவா இல்லை
தரிசான எனக்காகவா???
முட்புதர் முக்காட்டில் முகம்
மூடினாலும் சவரக்கடையின் சனியனாகி
போகிறேன்! சிலசமயங்களில் கைக்குழந்தை
தாயார்களின் பூச்சாண்டியகவும்!!!
ஏளனங்களின் ஏடுகளில் எனக்கென
சில பல அதிகாரங்கள்
நிச்சயம் தொகுக்க பட்டிருக்கும்!
சிற்சில பச்சாதாபங்களும்!!??
ஏதோதோ பிதற்றல்களில் நான்
இருந்தாலும்! எனக்கான பிதற்றல்களில்
ஊரும் உறவும்! கரிகோட்டு கிறுக்கல்களில்
புலவனாகவும்! பைத்தியமாகவும்!!!
மௌனங்களின் வசவுகளுக்கு எதிர்ப்புகள்
சற்று குறைவுதான்! நெற்றி
தழும்புகள் ஒன்றிரண்டுதான் உள்ளன!
நான்! நாய்கள்! கற்கள்???
பட்டங்களின் பின்புலம் பரிதாபத்திற்கு
மட்டுமே! மற்ற நேரங்களில்
அசட்டையாக அடுக்குத் தொடர்கள்
லூசுப் பயலே....
எனக்காக ஒலிக்கும் ஒருசில
உறவுகளின் ஒழக்குரலும் விடுமுறையில்
சிலகாலமாக! எங்கோ மூலையில்
"அண்ணன் என்ன தம்பி என்ன ...."
மந்தையின் நிலைகல்லாய் சிந்தையின்
சுவர்களுக்கு சிறை எழுப்புகிறேன்!
சிந்தித்தாலும் சிறகடித்தாலும் நீ
பைத்தியமே! பைத்தியம்...
எனக்கான தேடல்கள் மீண்டும்
தெருமுனைக்குள்ளே! வெற்றுசுவரும் சில
கரித்துண்டுகளும்! மீண்டும் அதேமூலையில்
" எல்லாம் கடந்து போகுமட..."
(நிலை பிறழ்ந்தவர்களை எல்லாம் ஒதுக்காத நாம்
அவரறியா மனம் பிறழ்ந்தவர்களை ஒதுக்குவது நியாயமா ??? அரவனைப்போம் அன்போடு வாருங்கள்.. )