இதுவரை எழுதப்படாத கதை

மனிதனுக்கு முன்னே
ஆப்பிள்கனி விளைந்தது போல
மலருக்கு முன்னே
முளைத்த முள்ளே...!

கண்ணீருக்கு அணை
கட்டப்படாதது போல
உனது கதையும்
எழுதப்படவில்லை...!
*
ரோஜா முள்ளே
உன் கிளிமூக்கு நுனியோ
குத்திக்கிழிக்கும் குறும்பு
உன் இடுக்கில்
எட்டிப் பார்க்குது அரும்பு
*
மலரோ
மின்னி உதிரும் திரைநட்சத்திரம்
முள்ளே நீ
குணச்சித்திரம்
*
தாவரப்புரியின் பூவரசிகள் சிலர்
முள்ளெனும் வாளேந்துகிறார்கள்
இருந்தும் ஏன்
பூப்பறிப்புகள் தடுக்கப்படவில்லை?
*
கடிகார முள்
காலத்தைக் கடத்துகிறது
காந்தமுள்
திசைகளை நடத்துகிறது
மோகமுள்
மனசைப் படுத்துகிறது

மோகம் ஒரு முள்ளெனில்
காதலும் முள்தானோ?
காதல்முள்ளைச் குத்திக்கொள்வதால்
இதயங்கள் ரோஜாக்களாகின்றன
*
சிறகுகட்டி பறக்கும்
கால தேவதை
முள்கிரீடம் சூடி
நடந்த நாட்களில்
புரட்சிப் பாடங்கள்
படிக்கப்பட்டன

முள்கிரீடம் அழுத
குருதியின் கண்ணீரில்
பூமியின் பாவம்
கழுவப்பட்டது
*
ஆனால் சரித்திரம்
இன்றின் பக்கங்களை
மஞ்சள் பதிப்புகளாய்
வெளியிடுகிறது

உதயகால ஊர்வலங்கள
மீண்டும் வரவேண்டும்
முள்ளே.. என் தேவதைக்கொரு
முள்கிரீடம் வேண்டும்…! (1994)

'தரையில் இறங்கும் தேவதைகள்' நூலிலிருந்து)

எழுதியவர் : கவித்தாசபாபதி (23-May-14, 6:53 pm)
பார்வை : 107

மேலே