தங்கைக்கு ஒரு கவிதை -✿ சந்தோஷ் ✿

நதியில் விளையாடி
மணலில் வீடுகட்டியதில்லை.
காக்கா கடி கடித்து
ஒரு தேன் மிட்டாய்க்கு
ஒரு யுத்தம் செய்திடவில்லை.
உன் சடையிழுத்து
வம்பு நான் செய்திடவுமில்லை
என் தலையில்கொட்டி
குறும்பு நீ செய்திடவுமில்லை
உன் விரல்பிடித்து நான்
தமிழ் எழுத வைக்கவுமில்லை
உன் குரல் பிடித்து
நான் மெய்மறந்ததுமில்லை
ஒரு தாய் வயிற்றில்
நீயும் நானும் பிறக்கவுமில்லை
ஆனாலும்
நீயும் நானும்
அண்ணன் - தங்கை.

எங்கோ பிறந்தோம்
எங்கோ வளர்கிறோம்.
தமிழை படித்தோம்
எழுத்தை பிடித்தோம்
கவிதை எழுதினோம் -அன்பு
காவியம் படைத்தோம்

கண்ணில் மணி போல
மணியில் நிழல் போல
அண்ணன் தங்கையாய்
உறவுக்கொண்டோம்.

என் இதயத்தாளில்
நீ எப்போது எழுதினாய்
” தங்கை” என்று

உன் இதயப்புத்தகத்தில்
நான் எப்போது அச்சிட்டேன்
“ அண்ணா “ என்று

மின்னலாய் வந்தாய் -அன்பு
மழைப்பொழிந்தாய்
கானல் நீராய் போகிறாய்.


என்னையே என்னை
சமாதானப்படுத்தி கொள்கிறேன்.
இதோ எம்
செவியில் ஒரு செய்தி
”நீங்கள் தொடர்புக்கொள்ளும்
கவிஞர் தொடர்பு எல்லைக்கு
அப்பால் இருக்கிறார். “

தொடர்ந்து முயற்சிக்கிறேன்
மீண்டும் நீ என் கவிதை
தொடர்புக்குள் வருவாய்
என்ற எதிர்ப்பார்ப்போடு...!


-----------------------------------------------------------------------
இந்த படைப்பு என் அன்பு தங்கைகளில் ஒருவரான வித்யா-க்கு எழுதியது.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (24-May-14, 3:47 pm)
பார்வை : 3457

மேலே