அப்பா

நன்றி அப்பா !
எப்போதாவது
யாரிடமாவது
அறிமுகப்படுத்தும் போது மட்டும்
என்னோடு
பேசுவதற்கு ...

நன்றி அப்பா !
முதன் முதலாய்
பிறந்ததால்
மூத்தவள் என்று
முடிசூட்டி, என்னை
மூலையில்
முடக்கி வைத்ததற்கு ...

நன்றி அப்பா !
இளையவள் பிறந்த பின்பு
இல்லத்தில் ஏற்றம் என்று
என் தங்கைக்கு மட்டும்
சிவப்புக் கம்பளம்
விரித்ததற்கு ...

நன்றி அப்பா !
முழுமையான பெண்ணாக
நான் மலரும் போது
முனகிய படியே என்
கனவுகளுக்கு
முற்றுப்புள்ளி வைத்ததற்கு ...

ஆனால் அப்பா !
எனக்குள் சில
ஆதங்கம் ...

சரியான நேரத்தில்
முறையாக எனக்கு
போலியோ
போடப்பட்டிருந்தால் ...

கைகளை ஊன்றி
உடலை இழுத்து
இழுத்து
இடம்பெயரும் , நிலை எனக்கு
இல்லாமல் போயிருந்தால் ...

என்
ஊனம் கண்டு
உள்ளத்தில் எரிந்து
உங்கள் உதடுகள், என்
உதிரம் உறிஞ்சும் வார்த்தைகள்
உதிர்க்காமல்
இருந்திருந்தால் ...

சரிந்த என்
உடையைச்
சரிசெய்ய
இன்னொருவர் தேவை
எனக்கு இல்லாது போயிருந்தால் ...

அப்பா !
உங்கள்
ஏற்றப் பாதையில் நான்
இடம் பெறா விட்டாலும் ...

தளர்ந்து தலை சாய்க்கும் போது
தாங்கும் மடியாய்
நான் இருப்பேன்
அப்பா !

எழுதியவர் : அசோக் vimala (30-May-14, 8:58 pm)
Tanglish : appa
பார்வை : 84

மேலே