தேவை புதிய கடவுள்கள்- பொள்ளாச்சி அபி
கஞ்சிக்கு வழியில்லை
கல்விக்கு வழியில்லை..
கழிப்பறைக்கும் வழியில்லை..
காலன் வந்து
அழைக்கும் வரை..!
பிழைத்தால் போதுமென
சாபங்களையேற்று
வாழும் உயிர்களின்
ஆறுதல் உறுதியாக..
எல்லாவற்றையும்
ஆண்டவன் பார்த்துக்
கொள்வான்..!-வாசகம்
ஒரு வேதமாக இருந்தது..!
கழிப்பறையில்லாததால்
வெட்டவெளி தேடி
இருளுக்குள் போன
சிறுமிகளின் வாழ்வு
தூக்குகளில் தொங்கியது..!
இருட்டறையில்
உறங்கிய இன்னுமிரண்டு
சிறுமிகள் வாழ்வு
கயவர்களால்
கற்பழிக்கப்பட்டது..!
அரசு விற்ற
மதுபானத்திலிருந்து
கிடைத்த லாபத்தில்
நிவாரணத் தொகை..,
செய்த பாவத்திற்கான
பரிகாரங்களாகிறது..!
ஆனால்..கடவுளே..!
எல்லாவற்றையும்
பார்த்துக் கொண்டிருக்கும் நீ..
எதில் மயங்கிக் கிடக்கிறாய்..?
எந்த பலவீனங்களின் பிடியில்
உனது பலத்தை ஒப்படைத்தாய்..?
உன்னை நம்பிய
எங்களைக் காக்க
சக்தியற்று..,
ஒரு சகதிக் கூறுபோல
கிடப்பதாயிருந்தால்..,
அறிகின்ற ஆற்றலின்றி
அழகு மட்டுமே
காட்டுகின்ற சிலையாக
நீயிருந்தால்..,
எனக்தெற்கு நீ..?
மேற்கிலே மறைந்தவனாகவும்
சிலுவையிலே மரித்தவனாகவும்
கல்லாக மாறியவனாகவும்
இருப்பதால் எனக்கென்ன
பாதுகாப்பு..? -இனி
“எல்லாவற்றையும்
ஆண்டவன் பார்த்துக்
கொள்வான்..!” என்பதில்
எனக்கு நம்பிக்கையில்லை.
எனது நம்பிக்கைகளை
காப்பாற்றும்
புதிய கடவுளின் ஜனனமே
எனக்குத் தேவை..!
அதுவரை-இந்த
நிகழ்காலம்..,
கடவுளற்ற காலமாகவே
இருக்கட்டும்..!-அதுதான்
உனக்கும் நல்லது..!